பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் எதிரொலி: சிசிடிவி கேமரா கண்காணிப்பில் நெல்லை காவல் நிலையங்கள்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் காணாமல் போன செல்போன்களை மீட்டு, அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஏப்.18) நடைப்பெற்றது. அதில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ரூ.18.6 லட்ச ரூபாய் மதிப்புடைய 1,18 செல்போனைகளை உரியவர்களிடம் ஒப்படைத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களைப் பிடுங்கி சித்தரவதை செய்த விவகாரம் புலன் விசாரணையில் இருக்கிறது. அது தொடர்பாக பேசினால் அது விசாரணையை பாதிக்கும். இது சம்பந்தமாக பல்வீர் சிங் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், நெல்லை மாவட்டத்தில் உள்ள எல்லா காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுவது குறித்து தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

முன்னதாக, அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திலுள்ள காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் உத்தரவுப்படி விசாரணை நடத்திய சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தார். மாநில மனித உரிமை ஆணையமும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் அவர் கடந்த 10-ம் தேதி விசாரணையை தொடங்கியிருந்தார். ஏற்கெனவே நடைபெற்றுள்ள விசாரணை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகியோர் அவரிடம் விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் திங்கள்கிழமை விசாரணையை தொடங்கினார்.

அப்போது, அம்பாசமுத்திரம் சப்இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, தலைமை காவலர் வின்சென்ட் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அத்துடன் பாதிக்கப்பட்ட எஸ். பூதப்பாண்டி என்பவரும் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார். இந்நிலையில், 2-ம் கட்டமாக அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் 5 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடந்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE