குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பயிற்சி எஸ்.ஐ,க்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ. பரமசிவத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சிதரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன்.குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வைரல் வீடியோவில் இருந்தது என்ன? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தி பழங்குடியின மக்களிடையே காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர்பேட்டை அருகே உள்ள பழங்குடியினர் வசிக்கும் திடீர் நகர் பகுதிக்கு சென்ற, பென்னலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம், கல்வியின் முக்கியத்துவம் குறித்து அம்மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அந்த வீடியோவில் அவர் பேசும்போது, “யாருக்காவது உதவி தேவைப்பட்டால் என்னை காவல் நிலையத்தில் பார்க்கலாம். பள்ளிக் கட்டணம், சாப்பாடு என எந்த உதவிக்கும் என்னை அணுகலாம். கையெடுத்துக் கேட்கிறேன்.தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். 5 நாட்கள் பள்ளிகளில் முட்டையும், 2 நாட்களுக்கு பயறும் வழங்கப்படுகிறது. குழந்தைகள் படிக்க, யார் காலில் விழுந்தாவது உதவி செய்கிறேன்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்தான் குற்றவாளி. குழந்தைகள் விஷயத்தில் நான் விடமாட்டேன். குழந்தைகளுக்கு கல்வி தர மறுப்பது, அவர்களுக்கு விஷம் கொடுப்பது மாதிரி, சமுதாயத்தை கருவறுப்பது மாதிரி. தப்பான மூட நம்பிக்கையால் மாட்டிக்காதீங்க” எனப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த விழிப்புணர்வு வீடியோவை பார்த்து வரும் பொதுமக்கள் மட்டுமல்ல, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் காவல் உதவியாளர் பரமசிவத்தை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ட்விட்டரில் காவலர் பரமசிவத்தைப் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE