30 நாளுக்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை - சட்ட விதிகளில் திருத்தம் செய்தது தமிழக அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒவ்வொரு அரையாண்டிலும் முதல் 30 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெற நகர்ப்புற உள்ளாட்சி சட்டவிதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடங்கும் முதல் மற்றும் 2-ம் அரையாண்டில் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தவேண்டும். தாமதமாக செலுத்தினால் எந்தவித அபராதமும் விதிக்க முடியாத நிலை இருந்தது. அதற்கான சட்ட வழிமுறைகள் வகுக்கப்படாமல் இருந்தது. இதனால் ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கும் தமிழகத்திலேயே பெரிய மாநகராட்சியான சென்னையில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ரூ.350 கோடிக்கு மேல் சொத்துவரி நிலுவை இருக்கும்.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக முதல் 15 நாட்களுக்குள் வரியை செலுத்தினால் 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற சலுகையை சென்னை மாநகராட்சி அறிவித்தது. இதனால் சொத்து வரி வசூல் அதிகரித்தது. மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தச் சூழலில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தில் (1998) உள்ள விதிகளில் கடந்த ஆண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது, "தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகள் அனைத்திலும், ஒவ்வொரு அரையாண்டின் முதல் 30 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்" என்று திருத்தப்பட்டது.

இந்த விதிகள் ஏப்.13 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, சொத்து வரி செலுத்தி ஊக்கத்தொகை பெறுவதற்கான அவகாசத்தை ஏப்.30-ம் தேதி வரை சென்னை மாநகராட்சி நிர்வாகம் நீட்டித்துள்ளது.

விரைவில் தமிழகத்தில் உள்ள இதர 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குநரக அதிகாரிகளிடம் கேட்டபோது, “தற்போது மேற்கொள்ளப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி சட்ட திருத்தத்தின்படி, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் ஏப்ரல்,அக்டோபர் மாதங்களில் 30-ம் தேதிக்குள் செலுத்தும் சொத்து வரிகளுக்கு 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE