உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.2,302 கோடியில் புதிதாக காலணி உற்பத்தி ஆலை

By செய்திப்பிரிவு

சென்னை: உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.2,302 கோடியில் புதிய காலணி உற்பத்தி ஆலை அமைப்பது தொடர்பாக தைவானின் ஹைக்ளோரி ஃபுட் வேர் நிறுவனம் மற்றும் தமிழக தொழில் துறை இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கும் தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை விரைவில் அடைய, தமிழக தொழில் துறை, உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமின்றி, பெருமளவில் வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, 2024 ஜன.10, 11-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, முதலீட்டை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தைவான் நாட்டின், சர்வதேச முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனமான ‘பவ் சென்’ குழுமத்தை சேர்ந்த ஹை க்ளோரி ஃபுட்வேர் நிறுவனம், காலணி உற்பத்திக்காக அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.2,302 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்கிறது.

இதற்காக, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் காலணி உற்பத்திக்கான ஆலையை அமைக்கிறது. இதன்மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் இறையன்பு, தொழில் துறை செயலர் ச.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, ‘பவ் சென்’ குழும துணைத் தலைவர்கள் ஜார்ஜ் லியு, அல்வின் ஹூ, திட்ட அலுவலக இயக்குநர் லின்ச் லின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் `தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் கொள்கை 2022' முதல்வரால் வெளியிடப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, இத்திட்டம் தமிழகத்துக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், மாநிலம் முழுவதும் தொழில் வளர்ச்சி பரவலாக இருக்கவேண்டும் என்பதன் அடிப்படையில், பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்க்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பலன் அளிக்கும் வகையிலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திட்டம் அமைக்கப்படுவதன் மூலம், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

மேலும், ஏற்கெனவே காலணி, தோல் பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதியில் முன்னணி மாநில மாக விளங்கி வரும் தமிழகம், தனது நிலையை மேலும் வலுப்படுத்திக்கொள்ள இது உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்