லண்டனில் பென்னி குயிக் சிலை மூடப்படவில்லை - செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது பேசியதாவது: இப்போதைய திமுக அரசு லண்டனில் பென்னி குயிக்குக்கு மார்பளவு சிலை அமைத்து திறந்துவைத்துள்ளது.

தற்போது பென்னி குயிக் சிலை கருப்புத் துணியால் மூடப்பட்டிருப்பதாகவும், சிலை சேதமடைந்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சிலை சேதமடைந்திருந்தால் அதை உடனே சரிசெய்ய வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதுதொடர்பாக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது: முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக்குக்கு லண்டனில் அரசு சார்பில் சிலை நிறுவ ரூ.10.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் சிலை நிறுவுதற்கு கூடுதலாக ரூ.23 லட்சம் செலவானது.

இந்த சிலையை திறப்பதற்காக அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் லண்டன் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பென்னிகுயிக் சிலையை நிறுவுவதற்கு தமிழக அரசு சார்பில் ஒரு குழு அங்கு அமைக்கப்பட்டது. அந்த குழு விழாவை ஏற்பாடு செய்வதற்காக திட்டமிட்டு, கூடுதலாக செலவு செய்துவிட்டனர். கூடுதல் நிதியை மட்டும் கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

பென்னி குயிக்கின் சிலை கருப்பு துணியால் கட்டப்பட்டது குறித்து 4 நாட்களுக்கு முன்னர் தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக அத்துணியைஅகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, துணி அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE