சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள் - முதல்வர் ஸ்டாலின், பழனிசாமி, தலைவர்கள் மரியாதை

By செய்திப்பிரிவு

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் சென்னையில் கிண்டியில் நடைபெற்ற விழாவில் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அரசு சார்பில் தீரன் சின்னமலையில் பிறந்தநாள் விழா, கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலை அமைந்துள்ள இடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன், அமைச்சர்கள் க.பொன்முடி, சு.முத்துசாமி, செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.கமேஷ்குமார், எம்எல்ஏக்கள் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஏஎம்வி பிரபாகர ராஜா, தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் இரா.செல்வராஜ் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தாய் நிலத்தின் உரிமைகளைக் காத்திட விடுதலைப் போரில் களம்கண்ட தீரன் சின்னமலையின் பிறந்தநாள் இன்று. சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை என்று உயர்ந்து நின்ற அவரது நினைவாக, முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்த திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினோம்’ என பதிவிட்டுள்ளார்.

அதிமுக சார்பில் கிண்டியில் கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி தலைமையில், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர், தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், அவர் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டு தீரன் சின்னமலை சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், பாமக சார்பில் அதன் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் தீரன் சின்னமலை சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில், கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், அமைப்புச் செயலாளர்கள் ம.கரிகாலன், வி.சுகுமார் பாபு, ஆர்.நேதாஜி கணேசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE