மதுரை மாவட்டத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆர்டிஐ தகவலில் அதிர்ச்சி

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று சிகிச்சையில் இருந்தவர்களில் இரண்டு ஆண்டுகளில் 387 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,543 பேரை மருத்துவர்கள் போராடி காப்பாற்றியுள்ளதாகவும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஆர்டிஐ தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

குடும்ப பிரச்சினைகள், பெற்றோர், ஆசிரியர் கண்டித்தது, காதல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் இவற்றில் தினமும் ஏதாவது ஒரு காரணத்திற்காக விஷம் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றவர்கள், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவர்கள் பெரும் சிரமப்பட்டு அவர்களில் பலரை காப்பாற்றுகின்றனர். சிலரை காப்பாற்ற முடிவதில்லை.

மதுரை விவசாயத் தொழிலை பிரதானமாக கொண்டுள்ளதால் பாசனத்திற்காக பூச்சி மருந்துகளை விவசாயிகள் வாங்கி வைப்பது வழக்கம். இதனால், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விஷம் அருந்துபவர்கள் எளிதாக எடுத்து குடித்துவிடுகின்றனர்.இதுகுறித்து மதுரையை சேர்ந்த மருதுபாண்டி என்பவர், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகத்திடம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள், அவர்களில் இறந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தை கேட்டுள்ளார்.

அதற்கு மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள பதில்கள் வருமாறு; மதுரை மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு 2,380 பேரும் 2022ம் ஆண்டு 2,550 பேர் என மொத்தம் 4,930 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மருந்துவ சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில், கடந்த 2021ம் ஆண்டில் 180 பேரும், 2022ம் ஆண்டில் 207 பேரும் என இரண்டு ஆண்டுகளில் மட்டும் 387 பேர் உயிரிழந்துள்ளனர்.விஷம் குடித்தவர்கள் சிகிச்சைக்கு வருவது அதிகரித்ததால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விஷம் அருந்தி அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக சிறப்பு பிரிவு செயல்படுகிறது.

மருத்துவ குழுவினரின் துரிதமான சிகிச்சை முறையின் காரணமாக 4,543 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். பெற்றோர்கள் செல்போனை பார்க்க விடாத காரணத்திற்காக கூட பள்ளி மாணவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்து சிகிச்சைக்கு வருகிறார்கள். மருத்துவர்கள் மிகவும் போராடியே அவர்களது உயிர்களை காப்பாற்றுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE