முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் மறு சீரமைப்பு: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
சென்னை: முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் மறு சீரமைப்பு செய்யப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிப்புகளின் விவரம்:
- சத்துணவு திட்டத்தின் கீழ் 17,312 பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களுக்கு 25.70 கோடி ரூபாயில் புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும்.
- சத்துணவு திட்டம், உள்ளக புகார் குழு மற்றும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க ரூ.50 லட்சத்தில் இணையதள முகப்பு மற்றும் செயலி உருவாக்கப்படும்.
- சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நவீன உயர் ரக தையல் இயந்திரம் வழங்கப்படும்.
- 30 ஆண்டுகளை கடந்த முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் மறு சீரமைக்கப்படும்.
- ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணித்து நிகழ் நேர பதிவுகளை மேற்கொள்ள 18 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.17.53 கோடியில் திறன் கைப்பேசிகள் வழங்கப்படும்.
- குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்கும் வகையில் 18 ஆயிரம் குழந்தைகள் மையங்களுக்கு ரூ.14.85 கோடியில் வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும்.
- சத்துணவு திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் குழந்தைகளுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும்.
- பாலியல் குற்றங்கள் அல்லாத பிற துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.50 லட்சத்திற்கு நிதி தொகுப்பு உருவாக்கப்படும்.
- திருச்சி, கோவை, சென்னையில் 1.14 கோடியில் குழந்தைகளுக்கான போதை தடுப்பு மையங்கள் அமைக்கப்படும்.