“சட்ட நடவடிக்கைக்கு நான் தயார்” - ரூ.500 கோடியே 1 ரூபாய் இழப்பீடு கோரி திமுகவுக்கு அண்ணாமலை சவால்

By செய்திப்பிரிவு

சென்னை: ரூ.500 கோடி இழப்பீடு தர வேண்டும். 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், திமுகவிடம் 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு அண்ணாமலை பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுகவினர் சொத்துப் பட்டியலை வெளியிட்ட பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதில், "உங்கள் பேச்சு, குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் விடியோவை நீக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ. 500,00,00,000 (ரூபாய் ஐந்நூறு கோடிகள் மட்டும்) எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எ

ங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார். இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றைச் செய்ய தவறினால், உங்களுக்கு எதிராகப் பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்குப் பதிலளித்துள்ள அண்ணாமலை சட்ட நடவடிக்கைக்கு தான் தயாராக இருப்பதாகக் கூறி 3 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணாமலை, "என் மீதும் பாரதிய ஜனதா கட்சியின் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாகக் கோருகிறேன், இதை நான் PM Cares நிதிக்கு செலுத்த விரும்புகிறேன்.

4400 கோடி ரூபாய் மோசடி செய்த ஹிஜாவு நிதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி தமிழக முதல்வரை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடை அளித்த புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் நான் பார்த்தேன். 100 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு இந்த மோசடியில் மு.க.ஸ்டாலின் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார் என்று நான் குற்றச்சாட்டு வைக்கலாமா என்றும் ஆர்.எஸ்.பாரதியிடம் கேள்வி எழுப்புகிறேன்.

அடுத்த 48 மணி நேரத்தில் என் மீதும் எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும் என்று மிகப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் நீங்கள் அனுப்பிய சட்ட அறிக்கைக்கு பதிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தமைக்கு இழப்பீடு கோரும் சட்ட அறிக்கையும் உங்களை விரைவில் வந்து சேரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE