உயர் அழுத்த பிரிவு நுகர்வோருக்கு பசுமை மின்சாரம் விற்பனை செய்ய மின்வாரியம் முடிவு

By செய்திப்பிரிவு

சென்னை: தொழிற்சாலைகள் உள்ளிட்ட உயர் அழுத்த பிரிவு நுகர்வோருக்கு பசுமை மின்சாரம் விற்பனை செய்ய மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் பல தனியார் நிறுவனங்கள் காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைத்துள்ளன. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, மின்வாரியம் கொள்முதல் செய்து வருகிறது.

ஒரு யூனிட் காற்றாலை மின்சாரம் ரூ.3.10-க்கும், சூரியசக்தி மின்சாரம் ரூ.2.61 முதல் ரூ.7.01-க்கும் வாங்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு மின்வாரியம், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் போன்ற உயர் அழுத்த பிரிவு நுகர்வோருக்கு, பசுமை மின்சாரம் விற்கத் திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி, அவர்களுக்கு ஒரு யூனிட் மின் கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறதோ, அதனுடன் கூடுதலாக 10 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படும்.

தற்போது வாகனத் தயாரிப்பு ஆலைகளுக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.6.75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனுடன் 10 சதவீதம் சேர்த்து பசுமை மின்கட்டணம் வசூலிக்கப்படும்.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் 8,680 மெகாவாட் திறனில் காற்றாலை மற்றும் 6 ஆயிரம் மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையங்களை அமைத்துள்ளன.

இதில், காற்றாலைகளில் இருந்து 30 சதவீதமும், 3,500 மெகாவாட் சூரியசக்தி மின்சாரமும் வாங்கும் வகையில் மின்வாரியம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE