பொதுச் செயலாளர் பதவி | பழனிசாமிக்கு அதிமுக செயற்குழுவில் அங்கீகாரம் - மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி மாநாடு நடத்த முடிவு

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமிக்கு, சென்னையில் நேற்று நடைபெற்ற கட்சி செயற்குழுக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. மேலும், மதுரையில் வரும் ஆக. 20-ம் தேதி மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றுநடைபெற்றது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் 250-க்கும்மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல், கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பழனிசாமிக்கு கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன. அதிமுக சார்பில் வரும் ஆக. 20-ம் தேதி மதுரையில் மாநாடு நடத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மற்ற தீர்மானங்கள் விவரம்: வரும் 2024 மக்களவைத் தேர்தல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற பாடுபட வேண்டும்.

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்வது, எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்களை நடத்த அனுமதி மறுப்பது, சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறியது, அரசின் கடன் சுமையை ரூ.2.5 லட்சம் கோடியாக அதிகப்படுத்தியது, சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டண உயர்வால் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவது, சட்டப்பேரவை மரபுகளைச் சீரழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடுவது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பாக விரைவில் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, உரிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE