‘நீட்’ தொடர்பான போராட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தமிழக அரசின் கடமை. மீறுவோர் மீது வழக்கு தொடர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேசமயம், அமைதியாக எதிர்ப்பை தெரிவிக்க எந்த தடையும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கையை தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழகத்திற்கு இந்த தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனிதா தற்கொலை விவகாரம்
இதையடுத்து தமிழகத்தில் ‘நீட்’ மதிப்பெண்கள் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் இடம் கிடைக்காத காரணத்தால் மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவி அனிதா மனமுடைந்து கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் அவருக்கு மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு பறிபோனது.
மாணவி அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ‘நீட்’ தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகள், மாணவர்கள் சார்பில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், ‘அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் ’நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அனிதா மரணம் குறித்து உண்மையை கண்டறிய சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி விசாரணை
இம்மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
‘நீட்’ தேர்வு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறை செயலர் ஆகியோரது கடமை. சட்டம் ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வேலைநிறுத்தம், போராட்டம், அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதும் தலைமைச் செயலரின் கடமை.
வன்முறை கூடாது
அதேசமயம், அமைதியான முறை யில் போராடுதல், விமர்சனம் செய்தல், கருத்து மாறுபாடு ஆகியவை சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதில் இருந்து மாறுபட்டது என்பதை தெளிவுபடுத்துகிறோம். வன்முறைக்கு வழிவகுக்காமல், மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்தவும், கோஷங்கள் எழுப்பவும் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். அனிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று எந்த உத்தரவும் பிறப்பிக்க மறுத்துவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில் பதிலளிக்கவும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago