பொதுச்செயலாளரான பிறகு அதிமுகவின் முதல் மாநாட்டிற்கு மதுரையை ஈபிஎஸ் தேர்ந்தெடுத்ததன் பின்னணி என்ன?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு கட்சியின் முதல் நாடு மதுரையில் நடத்தப்படுவதாக அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த மாநாடு பழனிசாமிக்கும், அதிமுகவுக்கும் திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு அடுத்து அதிமுகவின் மூன்றாம் தலைமுறை தலைவராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர், பொறுப்பேற்றபிறகு அதிமுகவின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்தில் கிளை செயலாளராக பணியை தொடங்கி தற்போது பொதுச்செயலாளராக உயர் பொறுப்பை ஏற்றுள்ள கே.பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பல்வறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதில் மதுரையில் கட்சி மாநாட்டை வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நடத்த நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கே.பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடக்கும் அதிமுகவின் முதல் மாநாடு என்பதோடு பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு காரணமான மதுரையில் இந்த மாநாடு நடத்தப்படுவதால் கட்சி தொண்டர்களை தாண்டி அரசியல் வட்டாரத்தில் இந்த மாநாடு தற்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது. கே.பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியான நாளில் மதுரை அருகே திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் ஏற்பாடு செய்த அவரது மகள் மற்றும் 50 ஏழை ஜோடிகளுக்கு திருமண விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அன்று காலைதான் அதிமுக பொதுக்குழுவிற்கு தீர்ப்பு வருவதாக இருவதாக, கே.பழனிசாமி திருமண நிகழ்ச்சியில் பதட்டத்துடனே கலந்து கொண்டார்.

வெற்றிவிழா: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரே, ''தீர்ப்பு எப்படியாக இருக்கும் என்ற அச்சத்திலே இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தேன். இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை. என்னுடைய உதட்டில் மட்டுமே சிரிப்பு இருந்தது. உள்ளத்திலே சிரிப்பு இல்லவே இல்லை'' என்று கூறியிருந்தார். மேலும், திருமண விழா நடந்த நாள் அதிமுக பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடைத்த நாளாக அமைந்துவிட்டது என்று அவர் பெருமிதம் அடைந்தார். அதனால், திருமண விழா கே.பழனிசாமியின் தலைமையிலான அதிமுகவினருக்கு வெற்றி விழாவானது.

எதிர்ப்பு கோஷம்: தனக்கு அங்கீகாரம் கிடைத்தபோது மதுரையில் இருந்ததால் அதே ஊரில் தான் பொறுப்பேற்ற பிறகு கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவது என கே.பழனிசாமி சென்டிமெண்டாக கருதுவதாகக் கூறப்படுகிறது. மேலும், கே.பழனிசாமிக்கு வட மாவட்டங்களில் மட்டுமே கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் செல்வாக்கு இருப்பதாகவும், இவர் பொறுப்பிற்கு வந்தபிறகு தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு செல்வாக்கு குறைந்து வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கே.பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் தென் மாவட்டங்களில் அவர்களுக்கு எதிராக சசிகலா, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வருகிறார்கள்.

மேலும், அதிமுகவில் இந்த மூன்று பிரிவினருக்கும் இடையே மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் கொங்கு மண்டலத்திற்குட்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்ததால், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அதிமுகவை மீண்டும் பலமான கட்சியாக மாற்ற பல்வேறு பிரிவாக பிரிந்து கிடக்கும் நிர்வாகிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோஷத்தை முன்னெடுத்துள்ளனர். ஆனால், அதற்கு கே.பழனிசாமி ஆதரவாளர்கள் மறுத்து வரும் நிலையில் சசிகலா, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடிப் பக்கம் 90 சதவீத கட்சி நிர்வாகிகள்: இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ''தென் மாவட்டங்களில் பெரும்பான்மை மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் 90 சதவீதம் பேர் எடப்பாடி கே.பழனிசாமி பக்கம் இருக்கிறார்கள். மற்றவர்களும் வருவதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. மதுரை மாவட்ட அதிமுகவில் செல்வாக்கு மிக்க நபர்களாக பார்க்கப்படும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் ஆரம்பம் முதலே கே.பழனிசாமி பக்கம்தான் இருந்து வருகிறார்கள். இவர்களைக் கொண்டு மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி தென் மாவட்டங்களில் தனக்கு பலத்தை காட்ட கே.பழனிசாமி நினைக்கிறார். மேலும், இந்த மாநாடு, அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு தென் மாவட்ட கட்சி நிர்வாகிகளை தயார்படுத்துவதற்கான முன்னேற்பாடாக செய்து வருகிறார்கள். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தால் அது தனக்கு மட்டுமில்லாது, மக்களவைத் தேர்தலுக்கும், அதிமுகவிற்கும் செல்வாக்கை அதிகரிக்கும் வாய்ப்பாக அமையும் என கே.பழனிசாமி நினைக்கிறார்'' என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்