சென்னை: கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர் சமூகத்திற்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற அனைத்து வன்னியர்களும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுத வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 % உள் இட ஒதுக்கீடு என்ற சமூக நீதி இலக்கை எட்டுவதற்காக மருத்துவர் ராமதாஸ் வழிகாட்டுதலில் கடுமையான சட்டப் போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம்.
2023 - 24ம் கல்வியாண்டு நெருங்கி விட்ட நிலையில், அதற்கு முன்பாக நமக்கான சமூக நீதியை நாம் வென்றெடுக்க நமது போராட்டத்தை விரைவு படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்தவே இந்த மடல். தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூகப் படிநிலையில் மிக, மிக பின்தங்கிய நிலையில் இருப்பது வன்னியர் சமூகம் தான்.
கையெழுத்துக் கூட போடத் தெரியாமல் கைரேகை வைக்கும் நிலையிலும், எழுதப் படிக்கத் தெரியாததால் ஏமாறும் நிலையிலும் தான் வன்னியர் சமூகம் வாடிக்கொண்டு இருந்தது. இந்த சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் 44 ஆண்டுகளுக்கு முன்பு சமூகநீதிப் போராட்டத்தைத் தொடங்கினார் மருத்துவர் ராமதாஸ்.
» சீமானை கைது செய்ய வேண்டும் - நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர் வலியுறுத்தல்
» சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - உரிமையாளர் உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு
பத்தாண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி, 1987ம் ஆண்டு ஒரு வார கால தொடர் சாலை மறியல் போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு 21 உயிர்களை பலி கொடுத்து தான், அடுத்து வந்த கருணாநிதி ஆட்சியில் வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20% இட ஒதுக்கீட்டை வென்றெடுத்தோம்.
ஆனால், நாம் பெற்றுக் கொடுத்த 20% இட ஒதுகீட்டில் நமக்கே உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள சில சிறிய, முன்னேறிய சமூகங்கள் அவர்களின் மக்கள்தொகை விழுக்காட்டை விட, அதிக பிரதிநிதித்துவத்தை கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் கைப்பற்றுகின்றன.
அதனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் மிகப்பெரும்பான்மையான சமுதாயமான வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. இதை நிரூபிப்பதற்கு ஏராளமான புள்ளி விவரங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக 2020ம் ஆண்டில் அறிவிக்கை செய்யப்பட்டு, 2022ம் ஆண்டில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட முதல் தொகுதி பணிகளுக்கான தேர்வுகளில் மாவட்ட துணை ஆட்சியர் பணிக்கு 18 பேரும், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணிக்கு 19 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அப்பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முறையே 3 மற்றும் 4 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், அவற்றில் ஓரிடம் கூட வன்னியர்களுக்கு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு எந்த அளவுக்கு சமூக அநீதி இழைக்கப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு எந்த சான்றும் தேவையில்லை.
இந்த சமூக அநீதியை போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. 2020ம் ஆண்டில் மட்டும் தான் என்றில்லை... ஒவ்வொரு ஆண்டும் வன்னியர்களுக்கு சமூக அநீதி தொடர்கிறது. 1989ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 3 முதல் 4% கூட பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.
அதிலும் கூட கடைநிலைப் பணிகளில் மட்டுமே இந்த அளவு கிடைக்கிறது. தொகுதி 1, தொகுதி 2 நிலை பணிகளில் வன்னிய சமுதாயத்தினருக்கு இரு விழுக்காடு கூட இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை. மருத்துவக் கல்வியில் வன்னியர்களுக்கு அதிகபட்சமாக 4% கூட பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. இந்தக் குறையை களைவதற்கு ஒரே வழி வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது தான்.
வன்னியர்களால் போராடிப் பெறப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு சமூக அநீதி இழைக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒருபுறம் மக்கள் தொகை அடிப்படையில் மிகவும் குறைவான, அதே நேரத்தில் வளமான சாதிகள் 20% இட ஒதுக்கீட்டில் அதிக இடங்களை கைப்பற்றிக் கொள்கின்றன என்றால், மற்றொரு புறம் பொதுப் பிரிவிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும் உள்ள சில சாதிகள், சாதி பெயரில் உள்ள ஒற்றுமையை பயன்படுத்தி, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று போலியான சாதி சான்றிதழ்களை வாங்கி 20% இட ஒதுக்கீட்டை சூறையாடுகின்றனர். அதனால் தான் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை.
உள் இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் தான் இத்தகைய சமூகநீதிச் சூறையாடல்களில் இருந்து வன்னியர்களை பாதுகாக்க முடியும். மேற்கண்ட அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு தான், தனி இட ஒதுக்கீடு கோரி மீண்டும் போராட்டத்தைத் தீவிரப் படுத்தினோம். அதற்கான பயனாகத் தான் 2021ம் ஆண்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீட்டை வழங்கியது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு.
சமூக நீதிக்கு எதிரான சக்திகள் தொடர்ந்த வழக்கில் அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்தாலும், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று கடந்த 31.03.2022ம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று அரசுக்கு வழிகாட்டியது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி, கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் தீர்ப்பு வெளியானதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் உரிய தரவுகளைத் திரட்டி, கடந்த கல்வியாண்டிலேயே வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியிருக்கும் என்று நம்பினோம். ஆனால், அது நடக்கவில்லை. அதனால், கடந்த கல்வியாண்டின் மாணவர் சேர்க்கையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை வன்னியர் இட ஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நாளில் இருந்து இதுவரை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் 40 முறை ஆள்தேர்வு அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் ஒருமுறையும், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஒரு முறையும் ஆள்தேர்வு அறிவிக்கையை வெளியிட்டுள்ளன. இந்த அனைத்து ஆள்தேர்வுகளிலும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கிறது. இது பெரும் சமூக அநீதி. இந்த அநீதி இனியாவது தடுக்கப்பட வேண்டும். வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 10 மாதங்கள் கழிந்த பிறகு தான் உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடந்த 12.01.2023ம் நாள் அரசு ஆணையிட்டது.
அதை சமூகநீதிக்கான பொங்கல் பரிசாக நினைத்து மகிழ்ந்த நாம், சித்திரைத் திருநாள் பரிசாக இடஒதுக்கீட்டு பரிந்துரை அறிக்கை கிடைக்கும் என்று நம்பினோம். ஆனால், நமக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருக்கிறது. பல்வேறு காரணங்களால் ஆணையம் அதன் பணிகளை நிறைவு செய்யாத நிலையில், அதற்கான கெடு 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் உறுதியாக இருப்பதாக சட்டப்பேரவையில் முதல்வர் உறுதியளித்தது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான காலம் வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பது பெரும் கவலையளிக்கிறது. 2023 - 24ம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக, அதாவது மே 31ம் தேதிக்குள் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமாகவே வன்னியர்களுக்கு சமூகநீதியை வழங்க முடியும்.
இது மிகவும் சாத்தியமான ஒன்று தான். வன்னியர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக நிலை குறித்த தரவுகள் தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும், தேர்வாணையங்களிலும் தயார் நிலையில் உள்ளன. அவற்றை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் ஏற்கனவே தொடங்கியிருக்கக் கூடும். அவற்றை ஆணையம் ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தால் மே 31ம் தேதிக்குள் வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் இயற்றுவது சாத்தியமே.
வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு தேவையான தரவுகளைத் திரட்டி, பரிந்துரை அறிக்கையை விரைவாக அரசிடம் தாக்கல் செய்யும் படி தமிழ்நாடு பிற்பபடுத்தப்பட்டோர் ஆணையத்தை கேட்டுக் கொள்வதன் மூலமாகவும், வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்றும்படி அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமாகவும் மட்டுமே வன்னியர் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்க முடியும்.
எனவே, வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டிற்கு தேவையான தரவுகளைத் திரட்டி, அவற்றின் அடிப்படையில் பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; அதன்படி வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தையும், தமிழக அரசையும் வேண்டி வன்னியர்களும், சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களும் கடிதம் எழுத வேண்டும்.
வன்னியர்களுக்கு சமூக நீதி வழங்குவதில் கட்சி சார்போ, அரசியல் நிலைப்பாடோ எந்த வகையிலும் தடையாக இருக்கக்கூடாது. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், சமூக படிநிலையிலும் பல நூற்றாண்டுகளாக மிக, மிக பின்தங்கிக் கிடக்கும் வன்னியர் சமுதாயம் முன்னேற வேண்டும் என்பது தான் ஒற்றை இலக்காக இருக்க வேண்டும். அதை உணர்ந்து அனைத்துக் கட்சிகள், அனைத்து அமைப்புகளைச் சேர்ந்த வன்னியர்களும், சமூக நீதியில் அக்கறை கொண்ட பிற சமூகத்தினரும் இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் வீ.பாரதி தாசனுக்கும் கடிதம் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago