மூதறிஞர் ராஜாஜிக்கு வரலாற்றில் உரிய மரியாதை கிடைக்கும் - கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவனிடம் பிரதமர் மோடி உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: வரலாற்றில் மூதறிஞர் ராஜாஜிக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்று அவரது கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவனிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

மூதறிஞர் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன். இவர் காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். காங்கிரஸின் அண்மைக் கால செயல்பாடுகளும், சி.ஆர்.கேசவனின் சிந்தனைகளும் முரண்பட்டு இருப்பதாக உணர்ந்ததால், காங்கிரஸில் இருந்து சமீபத்தில் விலகினார். இந்நிலையில் கடந்த ஏப்.8-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து, கடந்த 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அவருடனான சந்திப்பு அனுபவங்கள் குறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் சி.ஆர்.கேசவன் கூறியதாவது:

பிரதமருடனான சந்திப்பு எப்படி இருந்தது?

அவரை நான் சந்தித்தபோது, என்னை பாஜகவுக்கு உளமார வரவேற்பதாக கூறினார். இந்த சந்திப்பின்போது, தமிழ் பாரம்பரிய முறைப்படி கோ-ஆப்டெக்ஸில் வாங்கிய சால்வையை பிரதமருக்கு அணிவித்தேன். அதன் பிறகு ராஜாஜி எழுதிய ராமாயணம், மகாபாரதம், ஆதிசங்கரர் எழுதிய பஜகோவிந்தம் ஸ்தோத்திரத்துக்கு ராஜாஜி எழுதிய ஆங்கில உரை நூல், அந்த நூலை, அவரது மகளும், மகாத்மா காந்தியின் மருமகளுமான லட்சுமி தேவதாஸ் காந்தி இந்தியில் மொழிபெயர்த்த நூலையும் கொடுத்தேன்.

இந்த நூல்களை அவருக்கு கொடுக்க காரணம்?

பஜகோவிந்தம் ஸ்தோத்திரத்துக்கும், பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்கும் தொடர்பு உண்டு. ஆதிசங்கரர், தனது சீடர்களுடன் வாரணாசி வீதிகளில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு பண்டிதரை சந்தித்தார். அவர் பாணினியின் (சமஸ்கிருத மொழியியல் தந்தை) சமஸ்கிருத இலக்கண விதிகளை சத்தமாக படித்துக் கொண்டிருந்தார். உடனே ஆதிசங்கரர் அவரிடம் சென்று, உங்களுக்கு மரணம் வரும்போது எந்த இலக்கண விதிகளும் பயன்தராது என்று கூறினார். இந்த நிகழ்வு அடிப்படை யிலேயே ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தை எழுதினார். இதை அவரிடம் விளக்கி கூறினேன். அவரும் ஆர்வமுடன் அதை கேட்டுக்கொண்டார்.

அப்போது, ‘‘எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பஜகோவிந்தம் குறித்த ராஜாஜியின் வர்ணனையை கேட்டிருக்கிறேன்’’ என்றார். மேலும், “ஆதிசங்கரர் பஜகோவிந்தம் எழுதும்போது, ‘மரணே’ என்ற வார்த்தையை ஓரிடத்தில் பிரயோகம் செய்திருப்பார். அது கடுமையாக இருப்பதாகக் கருதியோ என்னவோ...எம்.எஸ்.சுப்புலட்சுமி அதை ‘காலே’ என்று மாற்றி பாடியிருக்கிறார் போலும்’’ என பேச்சின் இடையே நான் சொல்ல... இதை ஆர்வத்துடன் கேட்ட பிரதமர், அடுத்த முறை எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய பஜகோவிந்தம் பாடலைக் கேட்கும்போது இதை உன்னிப்பாக கவனிக்கிறேன் என்று கூறினார்.

ராஜாஜியின் ராமாயணம், மகாபாரதம் நூல்கள் கொடுத்தது குறித்து?

இந்த சந்திப்பில், காசி தமிழ் சங்கமத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் ‘‘ராமாயணம், மகாபாரதத்தை நாம் படித்திருந்தாலும், அதை ஆழமாக புரிந்துகொள்ள ராஜாஜியின் ராமாயணம், மகாபாரதத்தை படியுங்கள் என்று எனது ஆசிரியர் கூறினார்’’ என்று பேசியதை நினைவு கூர்ந்தேன். ராஜாஜியின் எழுத்தாற்றல் குறித்து அவர் அறிந்திருந்ததால், அந்த நூல்களை வழங்கினேன். தொடர்ந்து, தென்னகத்தில் ராமானுஜர், சங்கராச்சாரியார், ராஜாஜி, சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் போன்ற சிறந்த பெரிய மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களை புரிந்துகொள்ளாமல் பாரதத்தையே புரிந்துகொள்ள முடியாது என்று உரையாற்றியது ரொம்ப நெகிழ்வாக இருந்தது என்று கூறினேன். அதற்கு அவர், ‘‘அது உண்மை தானே’’ என்றார்.

உங்கள் குடும்ப பின்னணி குறித்து பிரதமரிடம் கூறினீர்களா?

‘‘நான் குடும்ப அரசியலில் இருந்து வரவில்லை. எனது தந்தை ஒரு பொறியாளர். எனது தாத்தா கிருஷ்ணசுவாமி ‘தி இந்து' நாளிதழின் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். கொள்ளு தாத்தா ராஜாஜிதான் அரசியலில் இருந்தார். நான் வெளிநாட்டில் மேற்படிப்பு முடித்து, வெளிநாட்டிலேயே வேலை செய்தேன். அதன் பிறகே பொதுவாழ்வுக்கு வந்தேன்’’ என்று பிரதமரிடம் கூறினேன். ராஜாஜி அரசு நிர்வாகத்தில் நேர்மையாக இருந்தது தொடர்பான சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளட்டுமா என்று கேட்டேன். பிரதமரும் அதற்கு சம்மதித்தார்.

ஒருமுறை தீன் தயாள் உபாத்யாயா ரயிலில் 3-ம் வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் குருஜி கோல்வால்கர் 2-ம் வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்ததை அறிந்து, இவர் அவரை சந்திக்க அங்கு சென்றார். சுமார் 2 மணி நேரம் குருஜியுடன் 2-ம் வகுப்பில் அமர்ந்து பேசிவிட்டு வந்த உபாத்யாயா, ரயில்வேயில் அபராதம் கட்டினார். 3-ம் வகுப்பு டிக்கெட் வாங்கிவிட்டு, 2 மணி நேரம் 2-ம் வகுப்பில் பயணம் செய்ததற்காக இந்த அபராதம் கட்டியதாக பின்னர் தெரிவித்தார். அதுபோல எனது தாத்தா வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

எனது தாத்தா கிருஷ்ணசுவாமி, ஒருசமயம் அலுவலகம் முடித்துவிட்டு இல்லம் திரும்ப காலதாமதம் ஆகிவிட்டது. அப்போது போலீஸ் வழிமறித்து சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் அவர் தனது இல்லத்தைக் காண்பித்துள்ளார். முதலமைச்சர் இல்லமா என்று ஆச்சரியத்துடன் போலீஸ் கேட்டபோது, ‘ஆமாம்.. நான் ராஜாஜியின் மகன்” என்று கூறியுள்ளார்.

இதை அறிந்த இன்ஸ்பெக்டர் தனக்கு பணி போய்விடும் என்று நினைத்து, மறுநாள் காலை தலைமைச் செயலகம் சென்றார். அவரைப் பார்த்த ராஜாஜி, “எனது மகன் பொதுமக்களுள் ஒருவர். முதலமைச்சர் மகன் என்பதற்காக அவரை நீங்கள், அரசாங்க வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றது தவறாகிவிடும். அதனால் அதற்கான பெட்ரோல் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறி அவரிடம் பணம் கொடுத்தார் என்று பிரதமரிடம் கூறினேன். இதைக் கேட்ட பிரதமர், “இதுதான் நம் கலாச்சாரம், பாரம்பரியம். இதுதான் நேர்மை” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

எங்கள் வீட்டில் சமையலராக இருக்கும் மதுரையை சேர்ந்த ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த சுப்புலட்சுமி, பிரதமரின் ஏழைக்கான வீடு திட்ட ஒதுக்கீடு கோரி விண்ணப்பித்திருந்தார். 2021-ல் அதற்கான ஒதுக்கீடு கிடைத்தது. அவரது குடும்ப உறவுகளில் இவர் தான் முதன்முறையாக கான்கிரீட் வீடு பெற்றிருக்கிறார். அதற்காக நன்றி தெரிவித்து அந்த பயனாளி தமிழில் எழுதிய கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தேன். அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அது தொடர்பாக பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சந்திப்பின் இறுதியில் குஜராத் மாநிலம் ஹரிபுராவில் எடுக்கப்பட்ட ராஜாஜி, சுபாஷ் சந்திரபோஸ், ராஜேந்திர பிரசாத், வல்லப பாய் படேல் ஆகியோர் இருக்கும் படத்தை பிரதமரிடம் வழங்கினேன். அதைப் பார்த்து பூரித்த அவர், அதே பகுதியில் தானும் ஏராளமான மாட்டு வண்டிகளுடன் பேரணி நடத்தியதை என்னிடம் நினைவுகூர்ந்தார். படேலுக்கும், நேதாஜிக்கும் உரிய மரியாதையை கொடுத்திருக்கிறோம். வரலாற்றில் ராஜாஜிக்கும் உரிய மரியாதை கண்டிப்பாக கிடைக்கும் என்று உறுதியளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்