மத்திய பாஜக அரசை கண்டித்து 70 இடங்களில் காங்கிரஸார் ரயில் மறியல்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரது எம்.பி.பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது.

இதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் கட்சி ரீதியிலான 76 மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை மாவட்டத்தில் 7 மாவட்டத் தலைவர்கள் சார்பில் எழும்பூர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடைபெற்றது. அதேபோல, அந்தந்த மாவட்டங்களில் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் தலைமையிலும் நேற்று ரயில் மறியல்போராட்டங்கள் நடைபெற்றன.

எழும்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: மத்திய பாஜக அரசு, இந்திய ஜனநாயகத்துக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி-அதானி இடையிலான நட்பு தொடர்பாகவும், பொதுத் துறை நிறுவனங்களின் நிதியை அதானிக்கு கொடுத்திருப்பது குறித்தும் மக்களவையில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியதால், அவரது பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது.

எம்.பி. பதவி இழந்த அத்வானி, குலாம்நபி ஆசாத் ஆகியோரை வீடுகளை காலி செய்யுமாறு கூறவில்லை. ஆனால், ராகுல் காந்தியின் வீட்டைக் காலி செய்யுமாறு வலியுறுத்துகின்றனர்.

மத்திய பாஜக அரசின் இதுபோன்ற ஜனநாயகத்துக்கு எதிரான,சட்டவிரோத செயல்களைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தடையை மீறி போராட்டம்: தொடர்ந்து, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை தலைமையில், தடையை மீறி ரயில் நிலையத்துக்குள் சென்று, ரயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இதில், கட்சியின் தேசிய செயலர் சிரிவெல்ல பிரசாத், முன்னாள்மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு, மாநிலத் துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஆ.கோபண்ணா, எஸ்.சி. அணித்தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், பொதுச் செயலாளர் சிரஞ்சீவி,மாவட்டத் தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, பல்வேறு மாவட்டங்களிலும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி யினர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE