தமிழகம் - சவுராஷ்டிரா இடையே ஆயிரம் ஆண்டுகள் பழமையான உறவு உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’திட்டத்தின் கீழ் 2-வது நிகழ்ச்சியாக, ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி குஜராத்தில் நாளை (ஏப்.17) முதல்26-ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசும், குஜராத் அரசும் இணைந்து செய்கின்றன. இதற்காக மதுரையில் இருந்து குஜராத் விராவல் நகர் வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மதுரையிலிருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு, நேற்று அதிகாலை 1.30 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம் 4-வது நடைமேடைக்கு வந்தது. இந்த ரயிலை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

இதன்பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது உறவுகளை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் நமது பிரதமர் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டது. கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழகத்தில் சில ஆயிரம் சவுராஷ்டிரா மக்கள் வாழ்கிறார்கள். நாம் ஒருவரையொருவர் தெரிந்து கொள்ளும் காலம் இது. அந்த வகையில்தான் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. நமக்கு சிறந்த பாரம்பரியம் உள்ளது. நாம் அதுகுறித்து தெரிந்து கொள்ள வேண்டும்

சவுராஷ்டிராவுக்கும், தமிழகத்துக்கும் சில ஆயிரம் ஆண்டுகள் பழமையான உறவு உள்ளது. தமிழ் இலக்கியம், கல்வெட்டுகளில், செப்பேடுகளில் சவுராஷ்டிராவுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து நிறைய விளக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தப் பயணத்துக்காக நிறைய மாணவர்கள், இளைஞர்கள் தன்னார்வலர்கள் ஆவலாக உள்ளதை தற்போது பார்த்தேன். அதில் முதல்முறை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். அது மகிழ்ச்சியாக உள்ளது. இந்நிகழ்ச்சி இந்த மாதம் இறுதி வரை தொடரும். தமிழகத்தில் உள்ள சவுராஷ்டிரா மக்கள் தங்கள் வேர்களைத் தேடி செல்ல வேண்டும். இது ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

சவுராஷ்டிரா மற்றும் தமிழ் கலாச்சாரத்துடன் இந்த நிகழ்வு நடைபெறும். போர்பந்தர், ராஜ்கோட், துவாரகா, ஏக்தா நகர் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE