மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைவதை தடுக்க பாஜக செய்த சதிதான் திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டு: பீட்டர் அல்போன்ஸ்

By செய்திப்பிரிவு

காரைக்குடி: மத சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைவதைத் தடுக்க பாஜக செய்த சதிதான் ஊழல் குற்றச்சாட்டு என மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

எம்எல்ஏ மாங்குடி, அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ரவி, பதிவாளர் ராஜமோகன், நகராட்சித் தலைவர் முத்துத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு கூற பாஜக, அண்ணாமலைக்கு தகுதி இல்லை. குற்றவாளிகளின் புகலிடமாக பாஜக மாறியுள்ளது. ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு அண்ணாமலை தலையின் மீது தொங்குகிறது. இதை திசை திருப்பவும், முதல்வரின் செயல்பாட்டை முடக்கவும்தான் ஊழல் புகார் கூறியுள்ளார்.

இதை ஏற்க தமிழக மக்கள் யாரும் ஏமாளிகள் இல்லை. அண்ணாமலை பாஜகவிடம் உள்ள சொத்துகள், நிதி பற்றியும் வெளியிட வேண்டும். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஆயிரம் கோடி ரூபாய் வரை பாஜகவினர் வசூலிக்கின்றனர். மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைவதைத் தடுக்க பாஜக செய்த சதி தான் ஊழல் குற்றச்சாட்டு.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட்டங்கள் நடத்த வேண்டும் என்பது தான் காங்கிரஸின் நிலைப்பாடு. பெரிய அளவில் போராட்டம் நடத்தினால், தீய சக்திகள் ஊடுருவி விரும்பத்தகாத காரியங்களை செய்கின்றன. அதன் விளைவுகளை கட்சி சந்திக்க வேண்டியுள்ளது. அதிமுக ஊழல் குறித்து மட்டும் கேள்வி எழுப்பாமல், பாஜக செய்த ஊழல் குறித்தும் சீமான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE