ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு - அமைச்சர்கள் கருத்து

By செய்திப்பிரிவு

கோவை: கோவையில் செய்தியாளர்களிடம் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று கூறியதாவது: பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் குடியிருக்கும் வீட்டின் மாத வாடகை ரூ.3.45 லட்சம். நண்பர்கள் யாராவது இவ்வாறு வருடக் கணக்கில் வாடகை செலுத்தி உதவுவார்களா? அரசியல் கட்சியில் தலைவராக இருந்து கொண்டு, என் செலவை யாரோ செய்கின்றனர் என்றால் என்ன அர்த்தம்.

வேட்பு மனுத்தாக்கலின் போது, வேட்பாளர்கள் குடும்பசொத்து விவரங்கள் வெளியிட்டதை திரும்ப எடுத்து அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அவர் கூறிய குற்றச்சாட்டுகளில் எந்த ஆதாரமும், முகாந்திரமும் இல்லை.

ரூ.4.50 லட்சத்துக்கு ரபேல் வாட்ச் வாங்கியவரிடம் இருந்து,3 மாதம் கழித்து ரூ.3 லட்சத்துக்கு வாங்க முடியுமா? வாட்ச்எண்ணை ஒருமுறை 147 எனவும், ஒருமுறை 149 எனவும் கூறுகிறார். ரசீதிலும், அவர் வெளியிட்ட எக்ஸல் ஷீட்டிலும் வேறுபாடு உள்ளது. வாட்ச் பில்ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சட்ட அமைச்சர் பதில்: புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியபோது,‘‘தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடுவதால் எங்களுக்கு கவலை இல்லை. மடியில் கனம் இல்லாததால் வழியில் பயமில்லை. அமைச்சர்கள் எதையும் சந்திக்க தயாராக உள்ளனர்’’ என்றார்.

தூத்துக்குடியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கூறும்போது, ‘‘சிலர் அரசியலில் தங்களது நிலையை தக்க வைத்துக் கொள்வதற்காக தவறான விஷயங்களைப் பேசி வருகின்றனர். இதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE