ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 12 கட்டுப்பாடுகள் - பலத்த போலீஸ் பாதுகாப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நாளை 47 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற உள்ளது. பேரணி முடிவில் பொதுக்கூட்டமும் நடக்கிறது. பேரணி நடக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 12 நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்துள்ளனர். இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர்கள்,மாவட்ட எஸ்பிக்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பேரணியின்போது தனி நபர்கள், சாதி, மதம் பற்றி தவறாக பேசக்கூடாது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எந்த கருத்தையும் பேசக்கூடாது. நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் எந்த ஒரு செயலிலும்ஈடுபடக் கூடாது. பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்ததாத வகையில் பேரணி மற்றும் நிகழ்ச்சி நடத்தி முடிக்க வேண்டும். கம்பு மற்றும் ஆயுதங்கள் எதையும் கைகளில் ஏந்தி செல்லக்கூடாது.

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே பேரணி செல்ல வேண்டும். பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அதை பேரணி ஏற்பாட்டாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். நிபந்தனைகள், உறுதி மொழிகள் மீறப்பட்டால் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE