திருப்பூரில் 60 வார்டுகளிலும் தனியார் மயமாகும் மாநகராட்சி குப்பை அள்ளும் பணி: திமுக கூட்டணி கட்சிகளிடையே வலுக்கும் எதிர்ப்பு

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளின் குப்பை அள்ளும் பணியும் தனியார் மயமாக்கப்படுவதால், திமுக கூட்டணி கட்சியினர் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

கடந்த 10-ம் தேதி திருப்பூர் மாநகராட்சி கூட்டம் நடந்தபோது கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வெளிநடப்பிலும் ஈடுபட்டனர்.

‘குப்பை அள்ளுவதை தனியார்மயமாக்கக்கூடாது, நிரந்தர துப்புரவு பணியாளர்களை அந்தந்த வார்டுகளில் பணியமர்த்த வேண்டும். அவர்களை வேறு வார்டுக்கு மாற்றக்கூடாது. இந்த தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.

இதற்கு மேயர் ந.தினேஷ்குமார், இது அரசின் கொள்கை முடிவு என்று தெரிவித்ததுடன், திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை செயல்படுத்துவதற்கு தேவையான வாகனங்கள் மற்றும் பணியாளர்களை வெளிச்சந்தை (அவுட்சோர்சிங்) முறையில் பணியமர்த்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு செய்ய, நகராட்சி நிர்வாக இயக்குநர் செயல்முறை உத்தரவுக்கு நிர்வாக அனுமதி வேண்டி தீர்மானம் வைக்கப்பட்டது. மாநகரில் சேகரமாகும் குப்பை எடையின் அடிப்படையில் தனியாருக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவே, தற்போது பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் கூறும்போது, "திடக்கழிவு மேலாண்மை பணியை முழுமையாக தனியாருக்கு தாரைவார்க்கும் தீர்மானம், மாநகரின் பொது சுகாதாரம் பேணுவதற்கும், மக்கள் நலனுக்கும் எதிரானது.

திடக்கழிவு மேலாண்மையில் தனியார்மயம் என்பது, பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கு உதவாது. மாறாக லஞ்ச ஊழலுக்கு வழிவகுக்கும். ஏற்கெனவே, 30 வார்டுகளில் தனியார் ஒப்பந்ததாரரிடம் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்களின் சட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

கரோனா பெருந்தொற்றில் உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மை பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து முன்களப் பணி செய்தனர். மாநில அரசின் கொள்கை முடிவு என்ற அடிப்படையில், திருப்பூர் மாநகரில் திடக்கழிவு மேலாண்மையில் தனியார்மயத்தை திணிப்பது மக்களின் ஆரோக்கியம், பொது சுகாதார கட்டமைப்பை முற்றிலும் சீர்குலைக்கும் நடவடிக்கை" என்றார்.

அதிமுக கவுன்சிலர் அன்பகம் திருப்பதி கூறும்போது, “ஏற்கெனவே தனியாருக்கு விடப்பட்ட 2 மண்டலங்களில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கும்போது, தற்போது மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் உள்ள 60 வார்டுகளிலும் தனியார்மயம் என்பது ஊழலுக்கு வழிவகுக்கும்” என்றார்.

மதிமுக கவுன்சிலர் நாகராஜ் கூறும்போது,‘‘அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். இது தொடர்பாக விசாரித்து விட்டு சொல்கிறேன்” என்றார். காங்கிரஸ் கவுன்சிலர் விஜயலட்சுமி கோபால்சாமி கூறும்போது, “குப்பை அள்ளும் பணி தனியார்மயமாக்கப்படுவதை எதிர்க்கிறேன்.

இனி, 10 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் 5 பேர் மட்டுமே வேலை செய்வார்கள். ஏற்கெனவே ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனத்தினர், தொழிலாளர்களுக்கு சம்பளத்தை கூட முறையாக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல, குப்பையை முறையாக அகற்றவில்லை என்பதையெல்லாம் கவனத்தில்கொண்டு, இத்திட்டத்தை கைவிட வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE