காவலர் வீரவணக்க நாள்: மலர்வளையம் வைத்து டிஜிபி அஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: காவலர் வீரவணக்க நாளையொட்டி மீட்புப் பணிகளில் வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஒவ்வோர் ஆண்டும் ஏப்.14-ம் தேதி இந்தியா முழுவதிலும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தீ விபத்து மற்றும் மீட்புப் பணிகளில் தைரியமாக செயல்பட்டு வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். 1944-ம் ஆண்டு ஏப்.14-ம் தேதி மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ‘எஸ்எஸ் போர்ட் ஸ்டைக்கின்ஸ்’ என்ற கப்பல் தீ விபத்துக்குள்ளானது.

இக்கப்பலில் 1,200 டன் வெடிபொருட்கள் மற்றும் எண்ணெய் வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக மும்பை தீயணைப்புத் துறை வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கப்பலில் உள்ள வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் மும்பை தீயணைப்பு துறையைச் சேர்ந்த 66 வீரர்கள் வீரமணம் அடைந்தனர். அவர்கள் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் இந்திய அரசால் ஏப்.14-ம் தேதி தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று காலை 8 மணியளவில் எழும்பூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை தலைமையகத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளில் வீரமணம் அடைந்த 33 தீயணைப்பு வீரர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அஞ்சலி செலுத்தினார். இதேபோல், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் ஆபாஷ்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.

ஒவ்வோர் ஆண்டும் இந்திய அரசால் ஒருதலைப்பு வழங்கப்பட்டு அந்த தலைப்பின்கீழ் நாடு முழுவதும் ஏப்.14 முதல் ஒரு வாரகாலம் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு, ‘தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியாகும்’ என்ற தலைப்பின்கீழ் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE