2011ம் ஆண்டு ஷெல் கம்பெனிகளிடம் இருந்து ரூ.200 கோடி லஞ்சம் பெற்றார் மு.க.ஸ்டாலின்: அண்ணாமலை குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2006-11ல் திமுக ஆட்சியில் இருந்தபோது சென்னையில் மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டப் பணிக்கான டெண்டர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு கிடைக்க மு.க.ஸ்டாலின் சாதகமாக செயல்பட்டு அதற்காக ரூ. 200 கோடி லஞ்சம் வாங்கியதாக அவர் மீது அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சிபிஐயிடம் புகார் அளிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பாக பேசிய அவர், சென்னை மெட்ரோ ரயில் முதல் திட்டத்தின்போது ஷெல் கம்பெனிகளிடம் இருந்து மு.க.ஸ்டாலின் ரூ.200 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,"2006 இல் இருந்து 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க அனுமதி கிடைக்கிறது. இந்த திட்டத்திற்கு ஜிகா நிறுவனம் 59 சதவீதமும், மத்திய அரசு 15 சதவீதமும், மாநில அரசு 21 சதவீதமும் நிதி உதவி அளித்தன. மொத்த திட்ட செலவு ரூ. 14 ஆயிரம் கோடி. தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக அவசர அவசரமாக இந்த டெண்டரைக் கொண்டு வருகிறார்கள். 5.5.2010ம் ஆண்டு மத்திய அரசு எக்சிஎம் பாலிசியை கொண்டு வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு டெண்டரில் கலந்து கொண்டால் அதை எப்படி மதிப்பீடு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக எக்சிஎம் பாலிசி கொண்டு வரப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 14.5.2010 ம் தேதி, ஆதாவது ஒன்பதே நாளில் டெண்டர் வெளியிடுகிறது. இதில் 3 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. டெண்டர் முடிய சில நாட்கள் இருக்கும் போது ஒரு திருத்தம் கொண்டு வருகிறார்கள். டெண்டரில் சுங்க வரியை சேர்க்கப் போகிறோம் என்று திருத்தம் கொண்டு வருகிறார்கள். அதற்குள் நிதி தொடர்பான கோரிக்கைகள் (financial bid ) சமர்ப்பிக்கப்பட்டு விட்டன.

ஆனால், எந்த காரணத்தைக் கொண்டும் சுங்க வரியை சேர்க்க கூடாது என்று எக்சிஎம் பாலிசி கூறுகிறது. சுங்க வரி சேர்ப்பதற்கு முன்பு ரூ.1417 கோடி கோரி இருந்த சீனாவைச் சேர்ந்த நிறுவனம் டெண்டருக்கு தகுதி பெற்று இருந்தது. இரண்டாது இடத்தில் ரூ.1434 கோடியுடன் ஆல்ஸ்டாம் நிறுவனம் உள்ளது. சுங்க வரி சேர்த்த உடன் இரண்டாவது இருந்த ஆல்ஸ்டாம் நிறுவனம் முதல் இடத்திற்கு வருகிறது. டெண்டர் முடிந்த பிறகு சுங்க வரியை திருப்பிக் கொடுத்து விட்டார்கள். ஆனால் டெண்டர் ஆல்ஸ்டாம் நிறுவனத்திற்கு அளிக்கப்படுகிறது.

உலக முழுவதும் பொருட்களை விற்பனை ஆல்ஸ்டாம் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆல்ஸ்டாம் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் 772 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் எங்களின் நேரடி குற்றச்சாட்டு முதல்வருக்கு 200 கோடி ரூபாய் ஆல்ஸ்டாம் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. இது 2 நாடுகளைச் சேர்ந்த ஷெல் நிறுவனங்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு தேர்தல் நிதிக்காக ரூ.200 கோடி மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த துறை அப்போது மு.க.ஸ்டாலினிடம் இருந்தது. இது தொடர்பாக நானே சிபிஐக்கு புகார் அளிக்கப் போகிறேன். மத்திய அரசின் 15 சதவீத நிதி உள்ளதால் இந்த விசாரிக்க சிபிஐக்கு உரிமை உள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக செய்திகளை படிக்க :

ரூ.3 லட்சம்: ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்ட அண்ணாமலை

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE