ஆருத்ரா மோசடி: பணத்தை இழந்தவர்கள் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆருத்ரா மோசடியில் பணத்தை இழந்தவர்கள் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சென்னை அமைந்தகரை மேத்தா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது.

இதை உண்மை என நம்பி அந்த நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சத்து 9,255 பேர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்தனர். ஆனால், உறுதி அளித்தபடி ஆருத்ரா நிறுவனம் நடந்து கொள்ளாமல் மோசடியில் ஈடுபட்டதாக தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து 11 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஆருந்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரீஷ் கடந்த மாதம் 23-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை 11 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் ஹரீஷ் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.84 கோடி வரை பெற்று கொடுத்துள்ளதும், ஆனால், அவருக்கு ஆருத்ரா நிறுவனத்திலிருந்து ரூ.130 கோடி கொடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

ஹரீஷ் ஆருத்ரா நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருந்தபோது பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்துள்ளார். பாஜக கட்சியில் விளையாட்டு பிரிவில் மாநிலப் பொறுப்பை பெறுவதற்காக முதலீட்டாளர்களுக்கு தான் திருப்பித் தர வேண்டிய பணத்திலிருந்து அக்கட்சியைச் சேர்ந்த சில நபர்களுக்குப் பணம் கொடுத்ததாகவும் ஹரீஷ் தெரிவித்துள்ளார். அதன்படி பணம் கொடுத்ததாகக் கூறப்பட்ட பல்லாவரத்தைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர் அலெக்ஸ், ராணிப்பேட்டை பாஜக மாவட்ட பொறுப்பில் உள்ள டாக்டர் சுதாகர் ஆகிய இருவருக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். அவர்கள், நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், ஆருத்ரா பண மோசடியில் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்தவர்கள் சென்னை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திடம் மனு அளிக்க முயற்சி செய்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்,"இந்த வழக்கில் பாஜக நிர்வாகிகளைத் தான் கைது செய்துள்ளனர். அவர்கள் தான் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த மோசடியில் கைது செய்யப்பட்டுவர்களிடம் இருந்து எங்களின் பணத்தை மீட்டு தர வேண்டும்." என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்