“இது சட்டமன்றம்...” - டென்ஷன் ஆன சபாநாயகர் அப்பாவு

By செய்திப்பிரிவு

சென்னை: "இது சட்டமன்றம்..." என்று சட்டப்பேரவை உறுப்பினர்களை நோக்கி சபாநாயகர் அப்பாவு சற்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று (ஏப்.13) காலை கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கின.

அப்போது, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசியின் கேள்விக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர் தமிழரசியை கேள்வி கேட்க சபாநாயகர் அழைத்தார். அப்போது அவையில் உறுப்பினர்கள் பேச்சு இரைச்சல் கேட்டது. இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு, "உறுப்பினர்கள் பேரவையில் அமைதியாக இருங்கள்.கேள்வி என்ன, பதில் என்ன என்று கொஞ்சம் கவனியுங்கள். இது சட்டமன்றம். யார் என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்க கூடிய இடம்" என்று கடிந்து கொண்டார். அப்போது, ஒப்பீட்டுக்காக ஒரு பொது இடத்தின் பெயரை அவர் சொன்னார். பின்னர், அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அவரே தெரிவித்தார்.

அந்த விளக்கத்தில், “பேரவைக்கு ஒரு அறிவிப்பு. இன்று காலை கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் தமிழரசியை கேள்வி கேட்க அழைத்தேன். அப்போது அவையில் அனுமதி இல்லாமல், சத்தம் அதிகமாக கேட்டுக் கொண்டு இருந்தது. அப்போது நான் எல்லா உறுப்பினர்களும் அமைதியாக இருங்கள் என்றும், கேளிக்கை விடுதி போல் சத்தம் அதிகமாக வருகிறது என்று கூறிறேன். நான் சொன்ன வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறேன்.

அவ்வாறு நான் கண்டித்தது தமிழரசியை என்று தவறாக சில தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், ஊடகங்களில் வருவதாக உறுப்பினர் தமிழரசி என்னிடம் கூறி உள்ளார். அவர் பேசுவது சபையில் கேட்கவில்லை, அமைச்சருக்கு கேட்கவில்லை. எனவே சபை அமைதி காக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அவ்வாறு பேசப்பட்டது. எனவே தவறாக தமிழரசியை சபாநாயகர் கண்டித்தார் என்ற செய்திகள் ஓடிக் கொண்டு இருந்தால் அவற்றை உடனடியாக நிறுத்தும்படியும். இனி இப்படிபட்ட செய்திகள் வராமல் இருக்க வேண்டும் என்று பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்." என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE