பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை - முதல்வர் ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுப்போம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ‘‘கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இயங்கிவரும் மழலையர் பள்ளியில் படிக்கும் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அப்பள்ளி தாளாளரை காவல் துறையினர் நேற்று அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவர் திமுகவை சேர்ந்தவர் என்று தெரியவருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். விருத்தாசலம் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் எம்ஆர்ஆர் ராதாகிருஷ்ணனும் இந்த விவகாரம் குறித்து பேசி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இயங்கிவரும் தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமி, கடந்த 11-ம் தேதி மாலை பள்ளி முடித்து வீட்டுக்கு சென்ற பின்னர், தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில், காவல் துறையினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு, பள்ளியின் தாளாளரும், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியருமான பக்கிரிசாமி மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி, விருத்தாசலம் நகரமன்றத்தின் 30-வது வார்டு உறுப்பினராக உள்ளதை அறிந்த உடனே, திமுக அடிப்படை உறுப்பினர் நிலை ரத்து செய்யப்பட்டு, கட்சியில் இருந்து நிரந்தரமாக அவர் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலரும் உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அரசைப் பொருத்தவரை, “நான் செய்தியை கேள்விப்படவில்லை; தொலைக்காட்சியில்தான் பார்த்தேன்” என்று சொல்ல நான் தயாராக இல்லை. இந்த செய்தி அறிந்ததும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசினேன். சம்பந்தப்பட்டவரை கைது செய்து, அதுதொடர்பான தகவலை அவர்கள் எனக்கு அளித்தனர்.

இந்த அரசை பொருத்தவரை, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், அதிலும் குறிப்பாக, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்துக்கே ஓர் அவமானச் சின்னம் என்று கருதுகிறோம். அந்த வகையில், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுப்போம். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

தலைவர்கள் கண்டனம்: இதற்கிடையே, சிறுமி மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிஞ்சு குழந்தையை சிதைக்க முயன்ற மனித மிருகத்தின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘பிஞ்சு குழந்தையை பாலியல் கொடுமை செய்ய, அவரது தாத்தா வயதில் உள்ள தாளாளருக்கு எப்படி மனம் வந்தது. அவரது பள்ளியில் பயிலும் பிற குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு. இத்தகைய மனித மிருகங்கள் சுதந்திரமாக நடமாட தகுதியற்றவர்கள். அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு 12 மணி நேரத்துக்கு பிறகுதான் கைது செய்யப்பட்டுள்ளார். இது போதுமான நடவடிக்கை இல்லை. அவரை உடனே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

திமுகவில் இருந்து நிரந்தர நீக்கம்: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று காலை வெளியிட்ட அறிவிப்பில், ‘கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி 30-வது
வார்டு உறுப்பினர் பக்கிரிசாமி, கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்’ என்று அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE