டிஜிட்டல் ஹவுஸ் ஆக மாறிய தமிழக சட்டப்பேரவை - சிறப்பு அம்சங்கள் 

By செய்திப்பிரிவு

சென்னை: டிஜிட்டல் ஹவுஸ் திட்டத்தின் கீழ் தமிழக சட்டப்பேரவையில், கேள்வி கேட்பவர், பதில் சொல்பவர்களின் பெயர்கள் போன்ற தகவல்கள் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில் 2021-22 நிதிஆண்டுக்கான தமிழக அரசின் முழுமையான பட்ஜெட் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் இருக்கை முன்பும் மேஜையில் சிபியுவை உள்ளடக்கிய ஆல்-இன்-ஒன் கணினி பொருத்தப்பட்டது. உறுப்பினர்கள் மட்டுமின்றி பேரவைத் தலைவர், அதிகாரிகள் இருக்கைகள் என அனைத்திலும் இந்த கணினி பொருத்தப்பட்டது. இதன்படி, பட்ஜெட்டை நிதியமைச்சர் வாசிக்கும்போது, அவர் வாசிக்கும் வரிகள், அப்படியே திரையில் காண்பிக்கப்பட்டது. அதேநேரம், உறுப்பினர்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் ‘டேப்’ கணினியில், முழு பட்ஜெட்டும் ‘பிடிஎஃப்’ வடிவில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போது டிஜிட்டல் ஹவுஸ் திட்டம் சட்டப் பேரவையில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி உறுப்பினர்களின் மேசை மேல் உள்ள கணினியில் இ-புக் என்ற செயலி நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் கேள்வி கேட்கும் உறுப்பினர்கள், பதில் சொல்லும் உறுப்பினர்கள், அவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை மின்னணு முறையில் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஹவுஸ் திட்டத்தின் கீழ் தமிழக சட்டப்பேரவையில், கேள்வி கேட்பவர், பதில் சொல்பவர்களின் பெயர்கள் போன்ற தகவல்கள் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி கேட்கும்போது, அவரது புகைப்படம் திரையில் ஒளிபரப்பானது. திரையில் தனது புகைப்படத்தைப் பார்த்ததும், அதனையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார் திண்டுக்கல் சீனிவாசன். இதற்கு பிறகு கேள்வி கேட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘’திண்டுக்கல் சீனிவாசனுக்கு கேள்வி கேட்பதிலிருந்த ஆர்வத்தை விடத் தன்னை டிவியில் பார்ப்பதில் அதிக ஆர்வம் இருந்ததைப் பார்க்க முடிந்தது’’ என்றது அவையை கலகலப்பூட்டியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE