தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் துறை ரீதியான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அத்துடன், தினசரி காலை முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் இதுவரை நடந்த ருசிகர சம்பவங்களின் தொகுப்பு இங்கே:
> ‘பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் குஜராத்தைப் போல தமிழகத்திலும் பெண்களுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதில் அளித்த சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், ‘பாலின வரவு, செலவு திட்டம் குறித்த பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகிறது’ என்று கூறினார்.
கறுப்பும் கலகலப்பும்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி மீதான தகுதி இழப்பு நடவடிக்கையை கண்டிக்கும் வகையில், செல்வப் பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். அந்த நாளில், பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனும் கறுப்பு நிற சேலையில் பேரவைக்கு வந்தார். கேள்வி நேரத்தில் அவர் பேசஎழுந்தபோது, பேரவைத் தலைவர் அப்பாவு, ‘‘காங்கிரஸ் உறுப்பினர்கள்தான் யூனிஃபார்மில் வந்துள்ளனர். நீங்களும் அதே யூனிஃபார்மில் வந்ததுபோல தெரிகிறதே?’’ என்றதும் அவை கலகலப்பானது.
புலி வால்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "எல்லோரும் பாராட்டும் வகையில் தொழில் துறை அமைச்சர் ஒரு தொழிலைக் மதுரைக்கு கொண்டுவர வேண்டும். மதுரை மக்கள் அவரை ஆஹா ஓஹோ என்று பாராட்ட வேண்டும்" என்று தெரிவித்தார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழக மக்கள் அனைவரும் அண்ணன் செல்லூர் ராஜுவை ஆஹா, ஓஹோ என்று கூறுகிறார்கள். மதுரை மக்கள் மாட்டை தான் பிடிப்பார்கள். ஆனால் செல்லூர் ராஜு புலியின் வாலை பிடித்து வந்துள்ளார்" என்று கலாய்த்தார்.
ஐபிஎல் பாஸ்: விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அதிமுக கொறடா வேலுமணி “ஐபிஎல் பாஸ் கிடைக்க விளையாட்டுத் துறை அமைச்சர் வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்” என்று பேசினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பிசிசிஐ (BCCI). அதற்கு உங்கள் நெருங்கிய நண்பரான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாதான் தலைமை பொறுப்பில் உள்ளார். நாங்கள் கேட்டால் அவர்கள் பாஸ் தர வாய்ப்பில்லை. நீங்கள் கேட்டால் நிச்சயம் தருவார்கள். எனவே அவரிடம் பேசி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் ஐந்து பாஸ் வாங்கித் தந்தால்கூட போதுமானது. நாங்கள் அதற்கு காசு வேண்டுமானாலும் கொடுக்கிறோம்" என்று தெரிவித்தது அவையை சிரிப்பலையில் குலுங்க வைத்தது.
மீன் விருந்து: மேட்டூர் மீன்களின் சிறப்பை சட்டப்பேரவையில் அனைத்து எம்எல்ஏக்களும் அறிந்துகொள்ளும் வகையில், பாமக எம்எல்ஏ சதாசிவம் பேரவை உறுப்பினர்களுக்கு சிறப்பு விருந்து வைத்தார். இதற்காக, மேட்டூர் அணையில் இருந்து பிடிக்கப்பட்ட ஒரு டன் மீன்களை சென்னைக்கு கொண்டு வந்தார். மேட்டூரில் இருந்து சமையலர் வரவழைத்து, திருவல்லிக்கேணியில் மீன் குழம்பு, மீன் வறுவல், காவிரி நீரில் விளைவிக்கப்பட்டு அரைக்கப்பட்ட அரிசி மூலம் சோறு, ரசம் உள்ளிட்டவை சமைத்து பார்சல்கள் செய்து, அமைச்சர்கள், அனைத்து எம்எல்ஏக்கள், அவர்களின் உதவியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கினார்.
> பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, "அரியலூர், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் சொந்த மாவட்டம். பாபநாசம் அவரது இல்லத்தரசியின் சொந்த ஊர். எனவே அமைச்சர் சிவசங்கரின் மாமியார் ஊரான பாபநாசத்துக்கும் அரியலூருக்கும் இடையே நேரடி போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், “எப்படி கேள்வி கேட்டால் எப்படி பதிலை வாங்க முடியும் என்பதை பேராசிரியர் என்பதால் ஜவாஹிருல்லா நன்கு அறிந்து வைத்துள்ளார். எனது மனைவியின் சொந்த ஊர் என்று குறிப்பிட்டு என்னை கோர்த்துவிட்டு விட்டீர்கள்” என்று தெரிவித்தார்.
மீண்டும் கலாய்ப்பு: கேள்வி நேரத்தின் போது, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச ஆரம்பித்தபோது, நத்தம் விஸ்வநாதன் உள்ளே வந்துவிட்டதால் அவர் பேச்சை நிறுத்திக் கொண்டார். இதைக் கண்ட சபாநாயகர் அப்பாவு, "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல பாருங்க செல்லூர் ராஜுவுக்கு" என கலாய்த்தார்.
துரைமுருகன் கலாய்ப்பு: சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதை லைவ் ஸ்ட்ரீமிங் என்ற முறையில் பேரவையின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளத் திரையில் பார்க்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திரையில், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி கேட்கும்போது, அவரது புகைப்படம் திரையில் ஒளிபரப்பானது. திரையில் தனது புகைப்படத்தைப் பார்த்ததும், அதனையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார் திண்டுக்கல் சீனிவாசன். இதற்கு பிறகு கேள்வி கேட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘’திண்டுக்கல் சீனிவாசனுக்கு கேள்வி கேட்பதிலிருந்த ஆர்வத்தை விடத் தன்னை டிவியில் பார்ப்பதில் அதிக ஆர்வம் இருந்ததைப் பார்க்க முடிந்தது’’ என்றார்.
அப்பாவு கமென்ட்: தவாக தலைவர் வேல்முருகன், சட்டப்பேரவையில் சத்தம் போட்டு பேசினார். இதனைத் தொடர்ந்து அவரை சபாநாயகர் எச்சரித்தார். பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகரை புகழ்ந்தார். இதைக் கேட்ட சபாநாயகர் அப்பாவு, “அப்ப நீங்க துணைக் கேள்வி கேட்க வரலையா?” என நகைச்சுவையாக கமெண்ட் அடித்தார்.
> மானியக் கோரிக்கை விவாதத்தில் அதிமுக உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், நாங்கள் தொடுத்த மாலையில் உதிர்த்த பூக்களை எடுத்து புதிதாக கட்டப்பட்ட மாலை தான் திமுக அரசின் வேளாண் பட்ஜெட். ஏற்கெனவே இருந்த இட்லியை உதிர்த்து உப்புமா கிண்டி கொடுத்திருப்பதாகவும் கூறினார். அதற்கு பதிலளித்து பேசிய வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “எதோ உப்புமா என்கிறீர்கள், அது ரவா உப்புமாவா, அரிசி உப்புமாவா, கோதுமை உப்புமாவா” என கேட்டார். அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன், “மணி ஒரு மணி ஆகப்போகுது, இந்த நேரத்துல இட்லி, பாயாசம், வடை என உறுப்பினர்கள் பேசுவது சரியில்ல. பசி தான் ஏறும்” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago