சென்னை: “சித்த மருத்துவத்திற்கு தனிப் பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவை ஆளுநர் நீண்ட நாட்களாக கிடப்பில் வைத்திருப்பது தமிழக மக்கள் மனநிலைக்கு எதிரான செயல்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2022-23-ஆம் கல்வி ஆண்டில் யுனானி முதுகலை பட்ட படிப்பில் இரண்டு பாடப் பிரிவுகள் புதியதாக தொடங்க ஒப்புதல் பெறப்பட்டு ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 6 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "யுனானி மருத்துவம் என்பது மத்திய ஆசிய நாடுகளில் இருந்து நமது இந்திய நாட்டிற்கு வந்தது. இந்திய மருத்துவ பிரிவுகளில் இதுவும் ஒன்றாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. சித்தா, ஆயுர்வேதம், யோகா, ஹோமியோபதி, யுனானி என்று பல்வேறு இந்திய மருத்துவ முறைகள் இன்றைக்கு மருத்துவ பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த வகையில் 1979-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ முறையில் யுனானிக்கென்று ஒரு தனி கல்லூரி சென்னையில் தொடங்கப்பட்டது.
தொடங்கப்பட்ட நாள்முதல் 26 எண்ணிக்கையில் வரை மட்டுமே இளங்கலை மாணவர்கள் பாடப்பிரிவு இருந்தது. 2016-க்கு பிறகு தற்போது 60 என்கின்ற எண்ணிக்கையில் உயர்த்தப்பட்டிருக்கிறது.
2008-ம் ஆண்டு 100 படுக்கைகளுடன் கூடிய உள்நோயாளிகள் பிரிவு ஒன்று அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டு இன்று மிகச்சிறப்பாக பயன் தந்து கொண்டிருக்கிறது.
இந்திய மருத்துவத்தை பொறுத்தவரை தமிழகத்தின் செயல்பாடு என்பது கடந்த காலங்களில் மிகச் சிறப்பாக நிறுபனமாகியிருந்தது. அண்மையில் இந்த துறையின் சார்பில் 11 அழகு சாதனப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு 6 பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கரோனா பேரிடர் காலத்தில் சித்த மருத்துவத்தின் சார்பில் கரோனா கேர் சென்டர் உருவாக்கி 1000-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் வாணியம்பாடியில் நிறுவப்பட்ட யுனானி கரோனா கேர் சென்டர் மிகப்பெரிய அளவில் அந்த பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய தாய்மார்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருந்தது.
முதல்வர், சித்த மருத்துவத்திற்கு தனிப் பல்கலைக்கழகம் இந்தியாவிலேயே முதன் முறையாக தொடங்குவதற்கு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்கள். ஒப்புதல் விரைவில் கிடைத்துவிடும் என்கின்ற நம்பிக்கையில் அண்ணா நகரில் அதற்கான அலுவலகம் ஒன்று தயார் செய்யப்பட்டது. அந்த அலுவலகத்தின் பணியினை நானும் துறையின் இயக்குநரும் நேரடியாக ஆய்வு செய்திருந்தோம்.
இந்த நிலையில், மாதவரம் பால்பண்ணையில் 25 ஏக்கர் நிலம் அந்த துறையிடம் இருந்து நில மாற்றம் செய்து சித்த மருத்துவ பல்கலைக் கழகம் கட்டுவதற்கான எற்பாடுகளை செய்திருக்கின்றோம். அதற்கான நிதி ஆதாரம் தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் வசம் இருக்கிறது. இந்த சித்த மருத்துவ பல்கலைக் கழகம் கட்டும் பணி தொடங்க அரசு தயாராக உள்ளது.
இருந்தாலும் ஆளுநர் அந்த மசோதாவை திருப்பி அனுப்பி சில ஐயங்களை கேட்டிருந்தார். குறிப்பாக, சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடக்குமா என்றெல்லாம் கேட்டு தேசிய தேர்வு முறைகளை இந்த சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் ஏற்று அதன்படி நடக்குமா என்றெல்லாம் கேட்டு இருந்தார்கள்.
நம்முடைய சட்ட வல்லுநர்கள் இப்போது நடைமுறையில் என்ன இருக்கிறதோ அதைத்தான், இந்த மருத்துவக் கல்லூரிகளில் என்ன மாதியான நடைமுறைகள் இருக்கிறதோ அதைத் தான் இதற்கும் செய்வோம் என்கின்ற வகையிலான பதிலும், நாளை நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைத்தால் நிச்சயம் இதற்கும் அதைப்போன்றதொரு நிலை இருக்கும் இதுமாதிரியான பதில்களை சட்ட வல்லுநர்கள் மூலம் எழுதி அனுப்பி இருக்கிறோம்.
கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி ஆளுநருக்கு பதில் அனுப்பப்பட்டுவிட்டது. அவர்களுக்கான சந்தேகங்கள் முழுமையாக தீர்ந்து இருக்கும் என்று கருதுகிறோம். எனவே, போன செப்டம்பர் 17-ம் தேதி அனுப்பி அதற்கு பிறகு இப்போது 6 மாதங்களை கடந்து இருக்கிறது. இன்னமும் கூட அதற்கு ஒப்புதல் தரப்படாத நிலை என்பது இருந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சித்த மருத்துவத்திற்கு ஆதரவான மனநிலையில் மக்கள் ஏராளமான பேர் இருக்கிறார்கள். சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒன்று தமிழகத்தில் அமைப்பதற்கு முதல்வர் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஏகோபித்த ஆதரவை மக்கள் தந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த மசோதாவை நீண்ட நாட்களாக கிடப்பில் வைத்திருப்பது என்பது சித்த மருத்துவத்திற்கு எதிரான ஒரு செயலாகும். தமிழக மக்கள் மனநிலைக்கு எதிரான செயலாகவும் இது பார்க்கப்படுகிறது. எனவே, விரைந்து அதற்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago