அதிமுக பொதுக்குழு, பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகள் ஏப்.20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: உயர் நீதிமன்றம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகள் ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மேல் முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பன்னீர்செல்வம் அணியினர் தரப்பு வழக்கறிஞர்கள், "கட்சியில் தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கிறது. தங்கள் தரப்பைச் சேர்ந்த ஆதரவாளர்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம். எனவே, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று வாதிட்டனர்.

இடைப்பட்ட காலத்தில் கட்சியில் எடுக்கப்படும் முடிவுகள், இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்குகளின் இறுதி விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதிமுக சார்பில் ஏப்ரல் 16 ஆம் தேதி செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென ஓபிஎஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதிகள் அதிமுக பொது செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் அளித்தனர்.

இதன்படி, மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் இன்று விசாரணைக்கு எடுத்தனர். அப்போது நீதிபதிகள், ‘‘இந்த வழக்கை அவசரமாக இன்று விசாரணைக்கு எடுக்க வேண்டிய அவசியம் என்ன? காரணத்தை தெரிந்து கொள்ளலாமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனுதாரர்களில் ஒருவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணிசங்கர், ‘‘கர்நாடகா தேர்தலில் போட்டியிடவும், வேட்பாளர்களை தேர்வு செய்யவும், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காகவும் செயற்குழு கூட்டப்படுகிறது.

ஆனால், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருடன் கலந்து பேசி பொதுக்குழுவில் முடிவு எடுக்க உத்தரவிட்டது. கடந்த 6-ஆம் தேதி அறிவிப்பில் அழைப்பிதழுடன் செயற்குழு கூட்டத்துக்கு வர வேண்டும் என்று எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள், மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் மனுதாரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி,எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, "சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு ஆகியவை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு கட்சியில் எந்த முடிவு எடுத்தாலும், அது இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டுள்ளது. எனவே, இது தேவையில்லாத கோரிக்கை. மேலும், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை, கர்நாடகா தேர்தலுடன் சம்பந்தப்படுத்த முடியாது’’ என்று வாதிட்டார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பின் மற்றொரு மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண், ‘‘சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோது, ஈரோடு தேர்தல் நடந்ததால், அப்படி ஒரு இடைக்கால உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது. அந்த சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனரா? அவருக்கு பொதுக்குழுவில் கூட செல்வாக்கு இல்லை. வெறும் 4 பொதுக்குழு உறுப்பினர்கள்தான் அவருக்கு ஆதரவாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''செயற்குழுவில் என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள்?'' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மூத்த வக்கீல் விஜய்நாராயண், ''கர்நாடகா மாநில தேர்தலில் பங்கேற்பது. கூட்டணி முடிவு செய்வது, தொகுதிகள், வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்ய போகிறோம்'' என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 4 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கலாம். ஆனால், அவர் கட்சிக்குள் வந்து விட்டால், 4 என்பது 400 ஆக மாறும். ஏற்கனவே, இடைக்கால வழக்கு தனி நீதிபதி முன்பு நிலுவையில் இருந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் கேட்டு விட்டு, பொதுச் செயலாளர் தேர்தலை அறிவித்தனர். அதுபோல, ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எதிர் தரப்பினர் எடுக்கின்றனர்’’ என்றார்.

அதற்கு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், "அரசியலில் அன்றாட நடவடிக்கை முக்கியமானது. கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, கட்சியின் நிலை குறித்து முடிவு எடுக்க வேண்டும். அதனால் செயற்குழு கூட்டம் கூட்டப்படுகிறது" என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் மணிசங்கர், "ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, இதுபோலத்தான் கூறினார்கள். கூட்டங்களையும், முடிவுகளையும் தன்னிச்சையாக எடுத்தனர்'' என்று கூறினார். அதற்கு நீதிபதிகள், ''அதிமுக.,வில் ஓ.பன்னீர்செல்வத்தின் தற்போதைய நிலை என்ன?'' என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு மூத்த வழக்கறிஞர் மணிசங்கர், ''கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்'' என்று பதில் அளித்தார். உடனே நீதிபதிகள், ''ஓ.பன்னீர்செல்வம் சொந்த கட்சிக்கு எதிராக சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்’’ என்றனர். இதற்கு பதில் அளித்த மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், ‘‘ஓ.பன்னீர்செல்வம் மாணவர் பருவத்தில் இருந்தே அதிமுகவில் உள்ளார். ஆனால்,அவரை சிலர் நீக்கியுள்ளனர்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், வருகிற 16-ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக செயற்குழு கூட்டத்துக்கு எதிராக எந்த ஒரு இடைக்கால உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கு 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் விசாரிக்கப்படும். வழக்கின் இறுதி விசாரணை முடித்து தீர்ப்பு அளிக்கப்படும். அதுவரை அதிமுகவில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவானாலும், அது இந்த தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’’ என்று உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்