ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே ஐபிஎல் பாஸ்: எஸ்.பி.வேலுமணி

By செய்திப்பிரிவு

சென்னை: இந்த ஆண்டு ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே ஐபிஎல் பாஸ் வழங்கப்பட்டு உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில், விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (ஏப்.11) நடைபெற்றது. இந்த விவாதத்தில் அதிமுக கொறடா வேலுமணி பங்கேற்று பேசியபோது, “அதிமுக ஆட்சியில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க எம்எல்ஏக்களுக்குப் பாஸ் வழங்கப்பட்டது. தற்போது 300-400 பாஸ் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் கிடைக்கவில்லை" என்று சொன்னதும், சபாநாயகர் அப்பாவு, ’’பாஸ் வேணும்னு கேக்குறீங்க... சட்டசபைக்கான பாஸா’’ எனக் கூறி கலாய்த்தார்.

பதிலுக்கு வேலுமணி, “இல்லை ஐபிஎல் போட்டிக்கான பாஸ் கேட்கிறேன். அதுவும் விளையாட்டுதானே. அதனால்தான் மானியக் கோரிக்கையில் தெரியப்படுத்துகிறேன். எனவே, விளையாட்டுத்துறை அமைச்சர் அதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்” எனப் பேசி அமர்ந்தார்.

உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதிலுரையில் பதில் கொடுத்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சென்னையில், நான்கு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகள் நடக்கவே இல்லையே. அப்படி இருக்கும்போது நீங்கள் யாருக்குப் பாஸ் கொடுத்தீர்கள் எனத் தெரியவில்லை. ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பிசிசிஐ (BCCI). அதற்கு உங்கள் நெருங்கிய நண்பரான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாதான் தலைமை பொறுப்பில் உள்ளார்.

நாங்கள் கேட்டால் அவர்கள் பாஸ் தர வாய்ப்பில்லை. நீங்கள் கேட்டால் நிச்சயம் தருவார்கள். எனவே அவரிடம் பேசி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் ஐந்து பாஸ் வாங்கித் தந்தால்கூட போதுமானது. நாங்கள் அதற்கு காசு வேண்டுமானாலும் கொடுக்கிறோம். என் தொகுதியிலுள்ள விளையாட்டு வீரர்களை என் சொந்த காசைக் கொடுத்தே போட்டியைக் காண வைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

இது குறித்து அதிமுக கொறடா வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும் பல்வேறு மக்கள் பிரச்சனைகள் மீதும் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாஸ் வழங்கப்படாததால், எதிர்க்கட்சி கொறடா என்ற முறையிலும், விளையாட்டு துறை மானிய கோரிக்கையின் போதுதான் கேட்க முடியும் என்பதாலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஐபிஎல் போட்டிகளுக்கான பாஸ் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் கேட்டேன்.

மேலும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் வெளிச்சந்தையில் சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. சட்ட விரோத டிக்கெட் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE