10.5% உள் ஒதுக்கீட்டிற்கான ஆணைய காலக்கெடு நீட்டிப்பு சமூக அநீதி: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாக மே 31ம் தேதிக்குள் வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை பேரவையில் நிறைவேற்றி வன்னியர்களுக்கு சமூக நீதி வழங்க முதல்வர் முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. சமூகத்தில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களுக்கு சமூக நீதி வழங்குவதில் தமிழக அரசால் ஏற்படுத்தப்படும் காலதாமதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாதது.

தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 42 ஆண்டுகளாக நடத்தப்பட்ட போராட்டங்களின் பயனாக கடந்த ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது.

அது தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து கடந்த 31.03.2022ம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை; உரிய தரவுகளைத் திரட்டி உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பளித்தது. ஆனால், அதன் பின்னர் ஓராண்டுக்கு மேலாகியும் வன்னியர் உள் இடஒதுக்கீடு வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை.

தமிழக அரசு நினைத்திருந்தால் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நாளில் இருந்து 3 மாதங்களில் உரிய தரவுகளைத் திரட்டி, சட்டம் இயற்றி கடந்த கல்வி ஆண்டிலேயே உள் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், 9 மாதங்கள் தாமதமாக கடந்த நவம்பர் 17ம் நாள் தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டது.

அதன்பின் இரு மாதங்கள் கடந்து 2023ம் ஆண்டு ஜனவரி 12ம் நாளில் தான், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்கான கூடுதல் ஆய்வு வரம்பை (Additional Terms of Reference )பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது.

அது வன்னியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த 3 மாதங்களுக்குள், அதாவது ஏப்ரல் 11ம் நாளுக்குள் இட ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். தமிழக அரசாணையின்படி வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த பரிந்துரையை ஏப்ரல் 11ம் நாளான நேற்றைக்குள் அரசிடம் ஆணையம் தாக்கல் செய்திருக்க வேண்டும்.

இது தொடர்பான நல்ல அறிவிப்பு தமிழக அரசிடமிருந்தும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்தும் வரும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் தான், ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இது பெரும் சமூக அநீதி. இந்த அறிவிப்பை தங்கள் தலையில் விழுந்த பேரிடியாக வன்னிய சமுதாய மக்கள் கருதுகின்றனர்.

வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக ஆணையத்திற்கு தொடக்கத்தில் 3 மாதங்கள் மட்டுமே காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. அதற்குள் உரிய தரவுகளை திரட்ட இயல வில்லை என்றால், கூடுதலாக ஒரு மாதம் மட்டும் காலக்கெடு வழங்கியிருக்கலாம். ஆனால், முதலில் வழங்கப்பட்ட காலக்கெடுவை விட இரு மடங்கு காலக்கெடு வழங்குவது எந்த வகையில் நியாயம்?

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலினுக்கு பலமுறை தொலைபேசி வாயிலாகவும், கடிதங்கள் வாயிலாகவும் கோரிக்கை விடுத்திருந்தேன். அப்போதெல்லாம் ஆணையம் விரைவில் தரவுகளைத் திரட்டி விடும்; அதைத்தொடர்ந்து சட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்திருந்தார். ஆனால், அதற்கு மாறாக காலக்கெடு 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால், இடஒதுக்கீடு கிடைக்குமா, கிடைக்காதா? என்ற ஐயம் வன்னியர் சமுதாய மக்களிடம் எழுந்திருக்கிறது.

வன்னியர்களுக்கான சமூக நீதியை ஒவ்வொரு காலகட்டத்திலும் போராடித் தான் பெற்றிருக்கிறோம். 1980ம் ஆண்டில் தொடங்கி 10 ஆண்டுகளுக்கு தொடர் போராட்டங்களை நடத்தி, ஒருவார தொடர் சாலை மறியல் போராட்டத்தில் 21 உயிர்களை துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலி கொடுத்த பெருந்தியாக வரலாறு வன்னியர்களுக்கு உண்டு.

1989ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த போது, வன்னியர்களின் போராட்டம் தொடரக்கக்கூடாது என்பதால் தான், ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் முதல்வர் கருணாநிதி, என்னை அழைத்து பேசி வன்னியர்கள் உள்ளிட்ட 108 சாதிகளைக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற புதிய பிரிவை உருவாக்கி, அதற்கு 20% இடஒதுக்கீடு வழங்கினார்.

1989ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் பேசும் போதே, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கேரளத்தில் 8 தொகுப்புகளாகவும், கர்நாடகத்தில் 6 தொகுப்புகளாகவும், ஆந்திரத்தில் 5 தொகுப்புகளாகவும் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி, தமிழகத்திலும் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 6 பிரிவுகளாக பிரித்து வழங்க வேண்டும்;

அதில் ஒரு பிரிவாக வன்னிய சமூகத்திற்கு 20% கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதை ஏற்றுக்கொள்வதாக கருணாநிதியும் உறுதியளித்தார். ஆனால், அதை அப்போது கலைஞருடன் இருந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இருவர் தடுத்து விட்டனர். கலைஞரை சந்தித்ததற்கு அடுத்த நாள் காலையில் வன்னியர் உள்ளிட்ட 108 சாதிகளுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

அந்த இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சமூகநீதி கிடைக்கவில்லை என்பதால் தான் உள் இட இதுக்கீடு கோரி போராடி வருகிறோம். இதில் உள்ள நியாயம் முதல்வர் முக ஸ்டாலினுக்கும் தெரியும். அப்படித் தெரிந்தும் கூட வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்கான காலக்கெடு 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை அளிக்க வேண்டும் என்ற ஆணை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடந்த ஜனவரி 12ம் தேதி வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த 3 மாதங்களில் அந்த ஆணையம் ஆக்கப்பூர்வமான வழிகளில் எதையும் செய்யவில்லை. இப்போது காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டி ஆணையம் முன்வைத்துள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

வன்னியர்களுக்காக மட்டுமின்றி, இஸ்லாமியர்கள், அருந்ததியர்கள் ஆகிய சமூகங்களுக்காகவும் தொடர் போராட்டங்களை நடத்தி இடஒதுக்கீடு பெற்றுக் கொடுத்த வரலாறு பாமக-க்கு உண்டு. தமிழகத்தில் வன்னியர்களுக்குத் தான் மிக நீண்ட, மிக அதிக போராட்ட வரலாறு உண்டு. ஆனால், அத்தகைய சூழலை ஏற்படுத்தி விடாமல், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாக மே 31ம் தேதிக்குள் வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை பேரவையில் நிறைவேற்றி வன்னியர்களுக்கு சமூக நீதி வழங்க முதல்வர் முக ஸ்டாலின் முன்வர வேண்டும்" என ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்