புதுடெல்லி: தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் மக்கள் நலப்பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2011 -ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் சுமார் 13 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த முடிவுக்கு எதிராகவும், மக்கள் நலப் பணியாளர்களின் நீக்கத்தை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நலப் பணியாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கை கடந்த 2012-ம் ஆண்டு விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது.
» மத்திய மின்தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு தினசரி 5,900 மெகாவாட் மின்சாரம் வழங்கல்
» திறந்தவெளியில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி: உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு 12,524 மக்கள்நலப்பணியாளர்களுக்கு மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஒருங்கிணைப்பு பணியாளர்களாக ரூ.7 ஆயிரத்து 500 மாத ஊதியத்தில் வேலை வழங்கப்படும் எனக்கூறி கடந்தாண்டு ஏப்ரலில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் தமிழக அரசின் புதியகொள்கை முடிவு தங்களை ஏமாற்றும் வகையில் உள்ளதாகக்கூறி விழுப்புரம் மக்கள் நலப் பணியாளர்கள் உரிமை மீட்டல் அமைப்பை சேர்ந்த மக்கள் நலப் பணியாளர்களில் ஒரு பகுதியினர் அரசின் புதிய கொள்கைப்படி பணியில் சேர இயலாது என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த மாதம் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், தற்போது 10,443 மக்கள் நலப்பணியாளர்கள் அரசின் புதிய கொள்கைமுடிவின் அடிப்படையில் ரூ.7,500 மாத ஊதியத்தில் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கும் மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அப்போது பணியில் சேராத மக்கள் நலப்பணியாளர்கள் தரப்பில், தங்களுக்கு பணிப் பாதுகாப்பு மிகவும் முக்கியம். ஆட்சியாளர்கள் மாறும்போது தங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பணியில் இருந்து நீக்கி விடுகின்றனர். அரசின் கொள்கை முடிவு எனக்கூறி எங்களை பணி நீக்கம் செய்வது ஏற்புடையதல்ல. எனவே எங்களின் பணிப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய உத்தரவிட வேண்டும். கடந்த 2011-ம் ஆண்டு ரூ. 4 ஆயிரம் ஊதியம் வழங்கினர். தற்போது ரூ.7 ஆயிரத்து 500 ஊதியம் வழங்குவது என்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று. கடைநிலை ஊழியர்கள் இதைவிட அதிகம் சம்பளம் வாங்குகின்றனர் என வாதிடப்பட்டது.
அப்போது மத்திய அரசு தரப்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்பது நிலையான வேலை வாய்ப்புத்திட்டம். இந்த திட்டம் தொடர்ந்து செயலில் இருக்கும். இந்த திட்டம் இருக்கும் வரை இவர்களின் பணிக்கும் எந்த பாதிப்பும் வராது என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், ‘‘தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் தொடரவேண்டும். மக்கள் நலப்பணியாளர்களின் பணிப் பாதுகாப்பு முக்கியமானது. அதை உறுதிபடுத்தும் வகையில் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பணியில் இருந்து நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் அரசிடம் திருப்பி வழங்கிய 6 மாத ஊதியத்தையும் அவர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago