திறந்தவெளியில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி: உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழகத்தில் திறந்தவெளியில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியை நான்குபுறமும் சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, திறந்தவெளியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நடத்த, நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி அளிக்க வேண்டும் என்று கடந்த பிப்.10-ம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, கடந்த பிப்.12, பிப்.19, மார்ச் 5 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு தேதியில் அனுமதி வழங்க கோரி ஆர்எஸ்எஸ் சார்பில் காவல் துறையில் மீண்டும் மனுஅளிக்கப்பட்டது. ஆனால், போலீஸார் அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், ‘ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்த திட்டமிட்டுள்ள அணிவகுப்பு பேரணியால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத் துறை அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே அனுமதி மறுக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின்மேல்முறையீட்டு மனு, நீதிபதிவி.ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், ‘‘சட்டம் - ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில்கொண்டு, 5 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த மட்டுமே முதலில் அனுமதி வழங்க முடியும். ஒரே நாளில் 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது. இது ‘சென்சிட்டிவ்' விஷயம் என்பதால் ஏனோதானோ என முடிவு எடுக்க முடியாது’’ என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

ஆர்எஸ்எஸ் சார்பில், ‘‘தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அச்சுறுத்தல் வருகிறது என்றால், காவல் துறைதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஆர்எஸ்எஸ் பேரணியை தடை செய்வது என்பது தீர்வு அல்ல. அதேபோல சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றால் அதை தடுத்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் அரசின் கடமை. அதை விடுத்து, தமிழகத்தில் மட்டும் எங்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. எங்களது அடிப்படை உரிமையை தமிழக அரசு மறுக்கிறது’’ என்று குற்றம்சாட்டப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. திறந்தவெளியில் ஆர்எஸ்எஸ் பேரணி செல்ல அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE