வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டு மீனவ இளைஞர் உயிரிழப்பு: ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சாலை மறியல்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: பங்குனி உத்திரத் திருவிழாவின்போது வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டு மீனவ இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் ராமேஸ்வரம் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் ராமகிருஷ்ணபுரம் சுனாமி காலனியைச் சேர்ந்த மீனவ இளைஞர்ரான முகேஷ் (24). கடந்த ஏப்ரல் 5 அன்று பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ராமநாதசுவாமி தெற்கு வாசல் அருகே சிலர் வழிமறிந்தது செல்போனை பறித்துக் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காயமடைந்த முகேஷ் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக முகேஷ் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ராமேஸ்வரம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த எஸ். பாலமுருகன், செந்தூரன் தம்பி மகன், ராம்கி, கணேஷ், ராம்குமார், புஷ்பராஜ், ராஜகுரு, ரமேஷ், பாரதிராஜா, அஜித்குமார், வினோத்குமார், ஏ. பாலமுருகன் ஆகிய 12 பேர் மீது ராமேஸ்வரம் துறைமுக போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், மதுரை மருத்துவமனையில் திங்கள்கிழமை மாலை முகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, 12 பேரை மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும், உயிரிழந்த முகேஷ் குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமகிருஷ்புரணத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று (செவ்வாய்கிழமை) ராமேசுவரம் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து ராமேஸ்வரம் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் மறியல் போராட்டமும் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. தங்கதுரை பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்த பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE