போக்சோ சிறப்பு நீதிமன்றம் உட்பட 5 நீதிமன்றங்கள் அமைக்கப்படும் - சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று நீதி நிர்வாகம் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர்.

அவர்களுக்குப் பதில் அளித்து அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: தமிழ்நாட்டில் சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட மொத்தம் 1,330நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. மொத்தம் 45 மாவட்ட நீதிபதி பணியிடங்களை சென்னை உயர் நீதிமன்றம் வாயிலாகவும், 245 சிவில்நீதிபதி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலமாகவும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு சட்டக் கல்லூரிகளில் 18ஆயிரம் இடங்கள் உள்ளன. அவற்றில் 1,200 இடங்கள் நிரம்பவில்லை.எனவே புதிதாக அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கவேண்டிய தேவை ஏற்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

திருநெல்வேலியில் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க கூடுதலாக ஒரு சிறப்பு நீதிமன்றம், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கூடுதலாக ஒரு சார்பு நீதிமன்றம், விழுப்புரத்தில் ஒரு மாவட்ட உரியையியல் நீதிமன்றமும், ஒருகுற்றவியல் நடுவர் நீதிமன்றம்,வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும்.

நீதிபதிகளின் பயன்பாட்டுக்காக ரூ.10.71 கோடி செலவில் 818 மடிக்கணினிகள், லேசர் பிரின்டர்கள்வாங்கப்படும். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள், எழுத்தர்கள், பொதுமக்களின் வசதிக்காகரூ.2 கோடியில் மின்னணுக் காட்சிப்பலகைகள் (டிஜிட்டல் டிஸ்பிளே போர்டு) நிறுவப்படும்.

கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் தலா ஓர் உதவி இயக்குநர் மற்றும் தேவையான பணியிடங்களுடன் குற்ற வழக்கு தொடர்புத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் ஏற்படுத்தப்படும்.

மாநிலத்தில் உள்ள 1008 சார்நிலை நீதிமன்றங்களுக்கு, ரூ.80 கோடியில் 2 கட்டங்களாக கணினி மற்றும் இதர உபகரணங்கள் வாங்கப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE