எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை அண்ணா சாலையில் பரபரப்பான வாகன நெரிசலிடையே சாலையின் நடுவில் ரிக்ஷாவை நிறுத்தி குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தார் ஒரு பெண். விநாடி நேரத்தில் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு இருக்கும் அபாயத்தை அந்த துப்புரவு தொழிலாளி உணர்ந்ததாகத் தெரியவில்லை. தன் பணியை மட்டுமே அவர் சிறப்பாக செய்து கொண்டிருந்தார்.
ஆனால், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளோ.. "அம்மா ஓரம்.. ஏம்மா பார்த்து.. நாங்களும் விழுந்துவிடுவோம்போல.." என்று கூறியவாறே வாகனங்களை வேகமாக செலுத்தினர்.
காலை 10.30 மணிக்கு இது அண்ணா சாலையில் நிகழ்ந்தது.
துப்புரவுப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் உயிர் முக்கியம், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பும் முக்கியம் என்பதற்காகவே இங்கே இந்த பதிவு.
சென்னையில் குப்பை அள்ளும் பணி பல இடங்களில் தனியாருக்கு மாற்றப்பட்டு வருகிறது. தெருக்களில் குப்பை அள்ள சாதாரண மீன் பாடி வகை கைரிக்ஷாக்களை ஊழியர்கள் பயன் படுத்துகின்றனர்.
வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும் பேருந்து சாலைகளில் இரவு முழுதும் ஊழியர்கள் அதற்கென உள்ள ஒளி உமிழும் பாதுகாப்பு மேலங்கி அணிந்து துப்புரவு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
கடற்கரை காமராஜர் சாலை, அண்ணா சாலை போன்ற போக்குவரத்து மிகுந்த சாலைகளில் சாலையின் வலப்புறம், சாலைத்தடுப்பு உள்ள பகுதிகளில் இதற்கென பிரத்யோகமாக உள்ள பிரஷ் அமைப்புடன் கூடிய வாகனங்களைப் பயன்படுத்தி சாலையோரம் தேங்கும் மண் மற்றும் குப்பைகளை அகற்றுவர்.
ஆனால் சமீப காலமாக அண்ணா சாலை போன்ற போக்குவரத்து மிக்க சாலைகளில் குப்பைகளை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரத்தில் ஆபத்தான முறையில் வாகனங்களை நிறுத்திக்கொண்டு குப்பைகளை அகற்றுகின்றனர்.
சென்னை அண்ணா சாலை எந்த நேரமும் பரபரப்பான போக்குவரத்தைக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட சாலையில் அண்ணா சிலை அருகே, காலை 10.30 மணிக்கு நெரிசல் மிக்க நேரத்தில் மாநகராட்சி தெருவில் குப்பை அள்ள கொடுக்கப்பட்ட கைரிக்ஷாவை வேகமாக செல்லும் வாகனங்கள் இடையே சாலையின் வலது பக்கத்தில் நிறுத்திக்கொண்டு பெண் ஊழியர் ஒருவர் குப்பைகளை அகற்றிக்கொண்டிருந்தார்.
காலையில் பணிக்கு செல்வோர் வாகனங்களில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். இவர்களில் பலரும் சாலையின் நடுவில் குறுக்கே நிற்கும் ரிக்ஷாவை கவனிக்கவில்லை ஆபத்தான நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த ரிக்ஷாவை கவனிக்காமல் கடைசி நேரத்தில் மோதலைத் தவிர்த்து வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருந்தனர்.
இது பற்றி அந்த பெண் ஊழியரிடம் கேட்ட போது அவர், “ஆமாம் சார் தினமும் இப்படித்தான் குப்பை அள்ளுகிறோம்’’ என்று தெரிவித்தார். இப்படி ரிக்ஷாவை சாலையின் வலது புறம் நிறுத்துவதால் வேகமாக வரும் வாகனங்கள் கவனிக்காமல் இடித்துவிடும் ஆபத்து உள்ளதே இதனால் உங்களுக்கும் ஆபத்து, இடிக்கும் வாகன ஓட்டியும் விபத்தில் சிக்குவாரே என்று கேட்டதற்கு “எனக்கு கொடுத்த பணியை செய்கிறேன்” என்று ஆபத்தை உணராமல் பேசிவிட்டு சென்றார்.
இது குறித்து 59 வது வார்டு மாநகராட்சி உதவி ஆய்வாளரிடம் தொடர்பு கொண்டபோது அவர் தனக்கு அந்த சாலை பொறுப்பு வராது என்று வேறொரு அதிகாரியை தொடர்பு கொள்ளும் படி கேட்டுக்கொண்டார்.
ஆனால் அந்த குறிப்பிட்ட அதிகாரியின் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இதற்கு பொறுப்பான தலைமை பொறியாளர் மகேசனை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தபோது அப்படி சாலை நடுவில் வாகனத்தை நிறுத்தி குப்பைகளை அகற்றுவது ஆபத்தான பணி, உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் தகவல் தெரிவித்து உரிய மாற்றம் செய்யச் சொல்கிறேன் என்று தெரிவித்தார்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நம்புவோம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago