நூலக வசதி, உணவு முறையை மாற்ற ரூ.26 கோடி - தமிழக சிறைத் துறையின் புதிய அறிவிப்புகள்
சென்னை: சிறைவாசிகளுக்கான உணவு முறையை மாற்றும் திட்டம் ரூ.26 கோடியில் செயல்படுத்தப்படும் என்று சிறைத் துறை அமைச்சர் ரகுபதி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.10 ) சட்டத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதிய அறிப்புகளை வெளியிட்டார். இதில் சிறைத் துறை அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:
- அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள், மாவட்ட சிறை மற்றும் புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி ஆகிவற்றில் நூலக வசதி ஏற்படுத்தப்படும்.
- சிறைத் துறையில் பணிபுரியும் முதல் நிலை மற்றும் 2வது நிலை காவலர்களுக்கான மிகை நேர பணிக்கான ஊதியம் காவல் துறை ஆளிநர்களுக்கு இணையாக ரூ.200-லிருந்து ரூ.500 ஆக ரூ.3.24 கோடி செலவில் உயர்த்தி வழங்கப்படும்.
- சிறைத் துறையில் பணியாளர்களுக்கான இடர் படி காவல் துறை பணியாளர்களுக்கு இணையாக ரூ.800-லிருந்து ரூ.1000-ஆக ரூ.1.06 கோடி செலவில் உயர்த்தி வழங்கப்படும்.
- ஆத்தூர், திண்டுக்கல், விருதுநகர், நாகர்கோவில், நாகை, ராமநாதபுரம், கோபி, செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்ட சிறைகள், 105 கிளைச் சிறைகளில் சிசிடிவி கேமரா மற்றும் 9 மத்திய சிறைகளில் காணொளிச் சுவர் வசதி ரூ.11.50 கோடி செலவில் அமைக்கப்படும்.
- தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைகளுக்கு எடுத்து வருவதை கண்டறிய 13 மாவட்ட சிறைகளுக்கு ரூ.2.73 கோடி செலவில் x ray baggage scanner வழங்கப்படும்.
- சிறைவாசிகளின் நலுனுக்காக நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உணவு முறை மற்றும் உணவின் அளவினை மாற்றி வழங்கிடும் பொருட்டு ஆண்டுக்கு ரூ.26 கோடிக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
- சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் ஆடியோ கால் வசதி 3 நாட்களுக்கு ஒருமுறை, மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்புக்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு, வீடியோ கால் வசதியும் புதிதாக ஏற்படுத்தப்படும்.
- சிறைவாசிகள் தயார் செய்யும் பொருட்கள் freedom என்ற பெயரில் காவலர் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும்.