கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியமான குடிசைத் தொழில்களில் ஒன்றாக தாழைப்பாய் தயாரிப்பு தொழில் விளங்கியது. தக்கலையை அடுத்த மக்காபாளையம் பகுதி மக்கள் பலரையும் இத்தொழில் வாழ வைத்தது. ஆனால், இன்று இத்தொழில் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளதால் இதை நம்பியிருந்தவர்களும் வாழ்க்கையை நடத்த வழியின்றி தவிக்கின்றனர்.
ஆரம்பக் காலத்தில் ஏழை, எளிய மக்கள் தென்னை ஒலையால் செய்த பாய்களை பயன்படுத்தி வந்த போது, ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டும் தாழை மடலால் செய்த பாய்களை அதிகம் பயன்படுத்தி வந்தனர்.
குமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள மக்காபாளையம் பகுதியில் தாழைப்பாய் செய்யும் தொழில் அதிக அளவில் நடந்து வந்தது. சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
சீதனப்பொருள்
திருமண விழாக்களின் போது மணப்பெண்ணுக்கு சீதனமாக கொடுக்க முன்பதிவு செய்து தாழைப்பாய்களை வாங்கிய காலங்களும் உண்டு. ஆனால், நாளடைவில் நாகரீக வளர்ச்சி மற்றும் பாய் பின்னுவதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறையால் தொய்வு ஏற்பட்டு இத்தொழில் நலிவடைந்தது.
கடந்த காலங்களில் குமரி மாவட்டத்திலிருந்து தாழைப்பாய்கள் அதிக அளவு கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டன. மக்காபாளையம் தாழைப்பாய்க்கு அங்கு அதிகம் வரவேற்பு இருந்தது. ஆனால், தற்போது இந்நிலை அடியோடு மாறி விட்டது.
இதுகுறித்து மக்காபாளையம் பகுதியை சேர்ந்த தாழைப்பாய் தயாரிக்கும் தொழிலாளி காஜாமைதீன் கூறியதாவது:
ரூ.700க்கு விற்பனை
குமரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் தாழைப்பாய் தயாரிப்பு தொழில் சிறப்பாக நடைபெற்றது. தாழைப்பாய் செய்யத் தேவையான மடல்களை ஆறுகள் மற்றும் குளங்களில் உள்ள தாழம்பூ செடிகளில் இருந்து சேகரிப்போம். இவற்றின் இருபுறமும் உள்ள முட்களை அகற்றிய பிறகு வெந்நீரில் வேக வைப்போம். இதே போல் தாழை குருத்துகளையும் வெந்நீரில் வேக வைக்கும் போது நூல் போன்று மெல்லிய பதத்துக்கு மாறும். நிறமும் மஞ்சள் நிறத்துக்கு மாறும். அதன் பிறகு மீண்டும் காய வைத்து தாழை மடல்கள் மற்றும் குருத்துகளை இணைத்து பாய் பின்னுவோம்.
தற்போது ஒரு தாழைப்பாய் ரூ.700-க்கு விற்கப்படுகிறது. ஒரு தாழைப்பாய் பின்ன குறைந்தது 4 மணி நேரமாகும். தொழிலாளிக்கு கூலியாக ரூ.300 கொடுத்தது போக ரூ.400 லாபமாக கிடைக்கும்.
உடல் சூடு தணியும்
தாழைப்பாயில் படுத்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியடையும். இதனால் ஆரோக்கியம் மேம்படும்.முன்பு அதிகளவு தாழைப்பாய்கள் தயார் செய்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வந்தோம். தேவையை கருதி இருப்பு வைத்தும் விற்பனை செய்தோம். ஆனால், தற்போது தொழிலாளர் பற்றாக்குறையாலும், பிளாஸ்டிக் பாய்கள் பயன்பாட்டின் காரணமாகவும் இத்தொழில் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனவே, பாரம்பரியம் மிக்க இத்தொழிலுக்கு புத்துணர்வூட்ட மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தாழைப்பாய் தயாரிப்பது குறித்து இலவசமாக பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு நான் தயாராக உள்ளேன். இதன் மூலம் அழிவிலிருந்து இத்தொழில் மீள வாய்ப்பு கிட்டும்.
இவ்வாறு அவர் கூறினார் .
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago