“தமிழகத்தில் மின்வெட்டு அதிகரிப்பால் மக்கள் அவதி” - அதிமுக எம்.பி தம்பிதுரை குற்றச்சாட்டு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: “தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்வெட்டால், மக்கள் அவதியுற்று வருகின்றனர்” என்று அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை எம்.பி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட பர்கூரில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.14 லட்சம் மதிப்பில் ஜெகதேவி சாலை, பால முருகன் கோயில் அருகே மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் அருகே ரூ.14 லட்சம் மதிப்பில் பேருந்து நிழற்கூடம் அமைக்கப்படுகிறது. இப்பணிகளை பூமி பூஜை செய்து, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை எம்.பி தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் தம்பிதுரை கூறியது "பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். பாஜக, அதிமுக கூட்டணி தொடர்பாக எங்களது கட்சியின் பொதுச் செயலாளர் தான் முடிவு செய்வார். அவரின் முடிவை ஏற்று நாங்கள் செயல்படுவோம். தமிழகத்தில் வலிமையான கட்சியாக அதிமுக உள்ளது. கர்நாடகா தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து வருகிற 16-ம் தேதி நடைபெறும் செயற் குழுவில் முடிவு செய்யப்படும்.

சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக திமுக கொண்டு வந்த தீர்மானத்தை, சில காரணங்களுக்காக அதிமுக புறக்கணித்துள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆளுநர் புறக்கணித்தது குறித்து சட்ட வல்லுநர்கள் தான் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை, இபிஎஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். அரசியல் ரீதியாக பிரதமரை டெல்லியில்தான் சந்தித்து வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது மக்களுக்கே தெரியும். பயணியர் நிழற்கூடம் கூட நாங்கள்தான் கட்டுகிறோம். திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றி பறக்கவிட்டு விட்டார்கள்.

மக்களவைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே பெண்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் ரூ.1000 வழங்குவதாக தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு நிதி இல்லை என கூறி ரூ.1000 வழங்குவதை நிறுத்திவிடுவார்கள். சொத்து வரி உட்பட வரிகள் உயர்வால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

தமிழகத்தில் மின்வெட்டு அதிகரிப்பால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எங்கள் கட்சியில் இருந்து சென்றவர்தான், தற்போது மின்சாரத் துறை அமைச்சராக உள்ளார். அவர்தான் பி டீம். அவர் திமுகவை ஒழிக்காமல் விடமாட்டார்” என்று தம்பிதுரை தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE