சென்னை பெருநகருக்கான 3-வது முழுமைத் திட்டம்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க முதல்வர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பெருநகருக்கான 3-வது முழுமைத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகருக்கான முழுமைத் திட்டத்தை (2026 - 2046) தயார் செய்யும் பணியில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஈடுபட்டுவருகிறது. இதுவரை சென்னைக்கு 2 முழுமைத் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. முதல் திட்டம் 1976-ம் ஆண்டும், 2-வது முழுமைத் திட்டம் 2006 முதல் 2026 வரையும் அமலில் இருக்கும். இந்த 2-வது முழுமைத் திட்டத்தில்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட், துணைக்கோள் நகரம் உள்ளிட்ட திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

இந்நிலையில் 1,189 சதுர கி.மீ. பரப்பிலான சென்னை பெருநகர பகுதிக்கு 3-வது பெருந்திட்டத்தை (2026-2046) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) தயாரிக்க உள்ளது. இத்திட்டம் வரும் 2026-ம் ஆண்டு முதல்செயல்பாட்டுக்கு வர உள்ளது. 3-வது பெருந்திட்டத்துக்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிக்க ஆலோசகர் நியமிக்கப்பட்டு, சென்னை பெருநகரின் 29 மண்டலங்களில் உள்ள எம்எல்ஏக்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள், பொதுமக்களிடம் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி,அவர்களது கருத்துகள், விருப்பங்கள் பெறப்படுகின்றன.

இதற்காக, மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை, ரயில், பேருந்து, மெட்ரோ நிலையங்கள், திரையரங்குகள், வணிகவளாகங்கள், அரசு அலுவலகங்கள்,கல்வி நிறுவனங்களில் நேரடியாகவும், வலைதளங்கள் மூலமாகவும் கருத்து கேட்கும் முயற்சியை சிஎம்டிஏ மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் மூன்றாம் பெருந்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெருநகரின் மூன்றாம் பெருந்திட்டத்தின் (2026 -2046) ஒரு பகுதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இணையவழி கருத்துக்கேட்பில் கலந்து கொள்ளுமாறு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது. தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை இந்த இணையவழி கணக்கெடுப்பின் வாயிலாக பதிவு செய்யுங்கள்." இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE