மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி ஒப்புதலை விரைவில் வழங்க வேண்டும். மத்திய அரசின்கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை நிலங்கள் ஆகியவற்றை விமான நிலைய செயல்பாட்டுக்காக, இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு இலவசமாக வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

தோல் மற்றும் தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான விரிவான உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பி.எம். மித்ரா பூங்காவை நிர்வகிக்க அனுமதிக்க வேண்டும். சென்னையிலுள்ள தமிழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக (TNPESU) வளாகத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை நிறுவுவதற்கான கருத்துரு ஏற்கெனவே உள்ளது. எனவே, அங்கு இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை அமைக்க வேண்டும்.

ஆசிய கடற்கரை போட்டி

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும். தமிழகத்தின் தொலைநோக்கு பார்வையைக் கருத்தில் கொண்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும்.

கப்பலூர் மற்றும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிகளை நகராட்சிக்கு வெளியே மாற்ற வேண்டும். பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் 40 சதவீதமாக குறைக்கப்படவேண்டும்.

சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டிச் செல்லும் நிகழ்வுகளில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். எனவே, பாக்.வளைகுடா பகுதிகளில் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

பாக்-நீரிணை பகுதியிலுள்ள ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வாழும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக நேரடியாக மீன்பிடி தொழிலை நம்பியுள்ளனர். எனவே, "கச்சத்தீவை" இந்தியாவுக்கு திரும்பப்பெறுவது மற்றும் பாக்- வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது ஆகியவை தமிழக அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது. எனவே, மீனவர்கள் எதிர்கொள்ளும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்டெடுப்பதன் மூலமே, பாரம்பரியக் கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையை மீட்டெடுக்க முடியும்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் ஈழத் தமிழர்களுக்கு சமமான குடிமுறை மற்றும் அரசியல் உரிமைகள் அளிப்பது தொடர்பாக இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE