மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு முத்தரசன் கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருப்போரூர்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்போரூர் அடுத்த தண்டலத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்றார்.

இந்த மாநாட்டில் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். பின்னர்,முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறியதாவது: தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றிவருகிறது. அவர்களுக்கான மாதாந்திர உதவி தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய உதவிஉபகரணங்களுக்கு மத்திய அரசு வரி விதித்துள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும்.

மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை உள்ளதால், அவர்களுக்கான சாய்வுதளம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதம் ஒருமுறை மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE