சென்னை: தென் தமிழகத்திற்கு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்றும் தமிழகத்தின் ரயில்வே, சாலை, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்தார்.
சென்னை - பல்லாவரம் அல்ஸ்தம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன்படி, தேசிய நெடுஞ்சாலை 747-ல் சாலைத் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், மதுரையில் கட்டப்பட்டுள்ள 7.3 கி.மீ. நீள மேல்மட்டச் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 785-ன் 24.4 கி.மீ. நீள 4 வழிச்சாலை ஆகியவற்றை தொடங்கி வைத்தார். இதனைத் தவிர்த்து, தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயில், திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம் பள்ளி இடையிலான ரயிலை பிரதமர் தொடங்கி வைத்தார். மேலும், திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம் பள்ளி இடையே 37 கி.மீ. அகல ரயில்பாதைத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாட்டின் தலைமகனான பேரறிஞர் அண்ணா பெயரிலான பன்னாட்டு விமான நிலையத்தில், 1,260 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம், சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை, திருத்துறைப் பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் சேவை எனத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான சில முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைக்க வருகை தந்திருக்கிறார் நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி.
பல்வேறு இனங்களைச் சார்ந்த பல மொழிகளைப் பேசும் மக்கள் பரந்து வாழும் பன்முகத்தன்மைக் கொண்ட மாநிலங்களைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தின் ஒன்றிய அரசானது, மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை தொடர்ந்து - தொய்வில்லாமல் நிறைவேற்றித் தரும் போதுதான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளம் பெறும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் வகுக்கப்பட்ட கூட்டாட்சிக் கருத்தியலும் செழிக்கும்.
» தமிழகத்தில் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
» இந்தியாவில் 9 ஆண்டுகளில் விமான நிலைய எண்ணிக்கை இரட்டிப்பு: சென்னையில் ஜோதிராதித்ய சிந்தியா பேச்சு
அந்த அடிப்படையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு திராவிட மாடல் அரசும் முனைப்போடு முயன்று வருகிறது. நெருக்கடியான நிதிநிலைச் சூழல் இருக்கும் போதிலும், நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்புகளுக்கு மூலதனச் செலவாக இருந்த 33,068 கோடி ரூபாயை இந்த ஆண்டு 44,365 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளோம்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள 2,423 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு சாலைத் திட்டங்களை தொடங்கி வைத்து, 1,277 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட இருக்கிறார்கள். நமது மாநிலப் பொருளாதாரத்தின் ரத்த நாளங்களாக விளங்கும், சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒன்றிய அரசின் முயற்சிகளுக்கு, தமிழ்நாடு அரசு தன்னுடைய முழு ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே, சிறந்த சாலைக் கட்டமைப்பை பெற்று, சாலைகள் அடர்த்திக் குறியீட்டில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. சாலைக் கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு பெரும் மூலதனச் செலவினங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இருப்பினும், தமிழ்நாட்டின் பல பகுதிகளில், அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் இன்றியமையாத சாலைக் கட்டமைப்புத் தேவைகள் தொடர்ந்து உயர்ந்தவாறு உள்ளன.
இத்தகைய தேவைகளை நிறைவு செய்வதற்கான முக்கிய திட்டங்களான,சென்னை - மதுரவாயல் உயர்மட்டச் சாலை,
சென்னை- தாம்பரம் உயர்மட்டச் சாலை, கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலை ஆக்குதல், சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் நெடுஞ்சாலையையும், சென்னை -மதுரை தேசிய நெடுஞ்சாலையையும் ஆறு வழித்தடமாக மேம்படுத்துதல் போன்ற பல்வேறு முக்கிய திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பிரதமர் இன்றையதினம் தொடங்கி வைத்துள்ள 'வந்தே பாரத்' ரயில் சேவை தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் வாழும் மக்களுக்கு பேருதவியாக விளங்கும் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இதேபோல், தமிழ்நாட்டில் வாழும் மக்கள் பயன்பெறக்கூடிய வகையில், சென்னையிலிருந்து மதுரைக்கும் இந்த 'வந்தே பாரத்' ரயில் சேவை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைக்கிறேன். அதோடு 'வந்தே பாரத்' ரயில் சேவைக்கான டிக்கெட் கட்டணத்தை அனைவரும் பயணம் செய்வதற்கு ஏதுவாக குறைக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
அதே நேரத்தில், நமது மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு ரயில்வே திட்டங்கள் குறித்த ஒரு முக்கிய கருத்தையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் தமிழ்நாட்டுக்கு, பல ஆண்டுகளாகவே ரயில்வே துறையால் போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பதும் தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த கருத்து. இது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும், ரயில்வே வரவு செலவு திட்டத்தில் போதிய அளவு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படாததால், இந்தத் திட்டங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக இன்னும் நிறைவடையாத நிலையில் இருக்கிறது. எனவே தமிழ்நாட்டுக்கு புதிய ரயில்வே திட்டங்களை அறிவிப்பதோடு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும் உயர்த்தித் தரவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான புதிய நவீன விமான நிலையம் ஒன்றை பரந்தூரில் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம். இதுதவிர கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி போன்ற பல விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்குத் தேவைப்படும் நிலங்களுக்காக மாநில அரசால் 1894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் பயன்பெறக்கூடிய வகையில் இந்த விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கும் ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து, பிரதமரை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் நான் வலியுறுத்தி வந்துள்ளேன்.சென்னையில் தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவதுகட்டப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் பங்கினை வழங்குவதற்கான ஒப்புதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றிய அரசில் நிலுவையிலே உள்ளது. அதனை மேலும் காலதாமதமின்றி உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அண்மையில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், 9000 கோடி ரூபாய் செலவில் கோவையிலும், 8500 கோடி ரூபாய் செலவில் மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்திட அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்கான கருத்துருக்களும் விரைவில் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட உள்ளன. இவற்றுக்கும் ஒன்றிய அரசு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என்று வேண்டுகிறேன்.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் 'திராவிட மாடல்' அரசானது, எத்தனையோ சமூக வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சமூகவளர்ச்சித் திட்டங்களோடு உட்கட்டமைப்புகளையும் சீர்செய்து வருகிறது. அனைத்துத் துறை வளர்ச்சியின் நோக்கம் கொண்ட அரசாக இருப்பதால், அனைத்துத் துறைக்கும் சமமான அளவில் நிதிகளை ஒதுக்கி திட்டங்களைத் தீட்டி வருகிறோம். அதற்கு துணைபுரிவதாக ஒன்றிய அரசினுடைய திட்டங்கள் அமைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒன்றியத்தில் உண்மையான கூட்டாட்சி இருக்க வேண்டுமானால், மாநிலங்கள் சுயாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் வலியுறுத்தி வந்தார்கள். ஒரு மண்டபத்தின் மேல்பகுதியில் அனைத்து பளுவையும் வைத்துவிட்டு, பலமற்ற தூண்களை மண்டபத்தை தாங்குவதற்காக அமைப்பது கேலிக்குரியது அல்லவா என்று முத்தமிழறிஞர் கலைஞர் கேட்டார்.
மக்களுக்கு நெருக்கமானவை மாநிலங்களாக இருப்பதால் மக்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை மாநிலங்களுக்கே அதிகம் இருக்கிறது. எனவே, மாநிலங்களின் நிதித் தேவைகளையும் மாநில மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் திட்டங்களை நிறைவேற்றவும் ஒன்றிய அரசினுடைய ஒத்துழைப்பு மிகமிகத் தேவை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். இந்தியப் பிரதமரும் ஒரு மாநிலத்தினுடைய முதல்வராக இருந்தவர் என்பதால் எனது கோரிக்கையின் உள்ளீட்டை அவரும் உணர்வார் என்று நான் கருதுகிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago