ராகுல் காந்தி தகுதி இழப்பு விவகாரம்: தி.மலையில் ஏப்.15-ல் காங்கிரஸ் ரயில் மறியல் - விஷ்ணு பிரசாத் எம்.பி தகவல்

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: ராகுல் காந்தி தகுதி இழப்பு விவகாரத்தில் இம்மாதம் 15-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 இடங்களில் காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணு பிரசாத் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “உலகில் 609-வது இடத்தில் இருந்த அதானி 3-வது இடத்துக்கு முன்னேறிய சூட்சமத்துக்கு காரணம் என்ன? அதானிக்கு சொந்தமான விமானத்தில் மோடி வெளிநாட்டுக்கு பயணம் செய்த பின்னணியும், அதானி பெற்ற லாபம் என்ன? வெளிநாடுகளில் அனுபவம் இல்லாத அதானியின் தொழில் முதலீட்டுக்கு மோடியின் நட்பு காரணமா என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் முகம் சிகப்பாக மாறியது, நெருப்புகளை போன்று கண்கள் ஜொலித்தது.

இதன் எதிரொலியாக, தூங்கிக் கிடந்த வழக்கை உயிர்ப்பித்து, 24 நாட்களில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மறுநாளே அவரது எம்.பி பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது. வீட்டையும் காலி செய்ய உத்தரவிடப்பட்டது.

ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவே 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் கோடி, அதானிக்கு எங்கிருந்து வந்தது என கேள்வி கேட்டதால், ராகுல் காந்தியை மோடி அரசு குறி வைத்துள்ளது.

15-ம் தேதி ரயில் மறியல்: ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 15-ம் தேதி 2 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. மேலும், ஆட்சியர் அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கவில்லை. பாஜகதான் முடக்குகிறது. 19 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளதால் மோடி அரசுக்கு பயம் வந்துவிட்டது. ஒரே நேர்கோட்டில் வந்துவிட்டோம். அதானி குறித்து கேள்வி எழுப்புவார்கள், நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் அமைப்பது பற்றி பேசுவார்கள் என்பதற்காக மடை மாற்றும் வேலையை பாஜக செய்கிறது. உண்மையை மட்டும் ஆயுதமாக வைத்து ராகுல் காந்தி குரல் கொடுக்கின்றார்.

வேளாண், தொழில்நுட்பம் போன்ற உள்நாட்டு உற்பத்தி குறைந்து வேலைவாய்ப்பும் குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி வசூலிப்பது மட்டுமே குறிக்கோள். 40 சதவீதம் முடிக்கப்படாத பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையை விளம்பரத்துக்காக பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஓரிரு நாட்களில் 3 அடிக்கு மழை நீர் தேங்கியது. மோடியின் விளம்பர அரசியலை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE