பிரதமர் மோடியின் சென்னை நிகழ்வுகளில் அண்ணாமலை பங்கேற்காதது ஏன்?

By செய்திப்பிரிவு

சென்னை: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் காரணமாகவே சென்னையில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ள நிகழ்வுகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். சென்னை - கோவை இடையே ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது. இந்த சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

விமான நிலையத்தில் பிரதமரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், சென்னை புதிய விமான நிலையத்துக்கு வரும் பிரதமர், புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

விமான நிலையத்தில் இருந்து விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வந்த பிரதமர், அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையம் சென்றார். மாலை 4 மணிக்கு சென்னை - கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அண்ணாமலை பங்கேற்கவில்லை: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. பாஜக சார்பில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரதமர் பங்கேற்ற அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

அனுமதி இல்லை: சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தவிர பிற அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

முன்னதாக, விமான நிலையம் வந்த பிரதமரை வரவேற்க அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகை தந்திருந்தனர். | > வாசிக்க: சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE