சென்னை - கோவை 'வந்தே பாரத்' ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை - கோவை இடையிலான 'வந்தே பாரத்' ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து ரூ.1,260 கோடியில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதன்பிறகு, ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் கடற்படை தளம் வந்தார். அங்கிருந்த சாலை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை - கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் 'வந்தே பாரத்' ரயில் இதுவாகும். இந்தியாவில் இயக்கப்படும் 12-வது வந்தே பாரத் ரயில் இதுவாகும். முன்னதாக, சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலில் ஏறி பயணம் மேற்கொள்ள இருந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து பல்லாவரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயிலை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மேலும், திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையிலான ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைக்கிறார். இதனைத் தவிர்த்து திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையே 37 கி.மீ. அகல ரயில்பாதைத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

அண்ணாமலை ஆப்சென்ட்: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் காரணமாகவே சென்னையில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ள நிகழ்வுகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. | விரிவாக வாசிக்க > பிரதமர் மோடியின் சென்னை நிகழ்வுகளில் அண்ணாமலை பங்கேற்காதது ஏன்?

பிரதமருக்கு புத்தகம் பரிசு: சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்க சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புத்தகம் பரிசளித்து வரவேற்றார். 'Gandhi's Travel in TamilNadu' என்ற புத்தகத்தை பிரதமருக்கு முதல்வர் வழங்கி வரவேற்றார்.

மக்களைப் பார்த்து கையசைத்த பிரதமர்: சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் வந்த பிரதமர் மோடி மக்களைப் பார்த்து கையசைத்தார். விமான நிலையப் பகுதிகளில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி காரில் இருந்தபடி பார்வையிட்டார்.

புகைப்படக் காட்சியை பார்வையிட்டார்: புதிய விமான நிலைய முனையத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். மேலும், புதிய முனையத்தில் இருக்கின்ற பல்வேறு வசதிகளையும் பிரதமர் பார்வையிட்டார். இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா பிரதமருக்கு விளக்கினார்.

முதல்வருடன் கைக்குலுக்கி பாராட்டு: சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்துவைத்த பிரதமர் மோடி, புதிய முனையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார். அப்போது, உடன் இருந்த முதல்வர் ஸ்டாலினுடன் கைக்குலுக்கி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். | பார்க்க > எப்படி இருக்கிறது சென்னை விமான நிலைய புதிய முனையம்? - புகைப்படத் தொகுப்பு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE