சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் கையைப் பிடித்து சிரித்துப் பேசிய பிரதமர் மோடி!

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினின் கையைப் பிடித்து சிரித்துப் பேசினார்.

ரூ.1,260 கோடியில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய ஒருங்கிணைந்த முனையம் மூலம் பயணிகள் சேவைத் திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயர்த்தும் என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் புதிய முனையம், கோலம், சேலை, கோயில்கள் போன்ற பாரம்பரிய அம்சங்களைக் கொண்ட தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும், இயற்கையான சுற்றுப்புறத்தைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடன் இருந்தார். பிரதமர் முனையத்தை பார்வையிட்டு கொண்டு இருக்கும்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கொஞ்சம் விலகி நின்று கொண்டு இருந்தார். அப்போது, முதல்வரை அருகில் அழைத்த பிரதமர் மோடி, முதல்வரின் கையைப் பிடித்து சிரித்து பேசிக் கொண்டு இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE