சென்னை வந்தார் பிரதமர் மோடி: முதல்வர், ஆளுநர் வரவேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றனர்.

பிரதமர் மோடி இன்று பகல் 1.35 மணிக்கு ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணிக்கு வருகை தந்தார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பிரதமரை வரவேற்பதற்காக தமிழக அமைச்சர்கள், திமுக எம்பி கனிமொழி, பாஜக முக்கிய நிர்வாகிகள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

பிற்பகல் 3.25 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வரும் பிரதமர், அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையம் சென்று, மாலை 4 மணிக்கு சென்னை - கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னையில் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE