அமைச்சர்கள் உடனான பேச்சு எதிரொலி: ஜாக்டோ - ஜியோவின் கோட்டை முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஏப்.11-ம் தேதி நடைபெற இருந்த கோட்டை முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

வாழ்வாதார கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாக ஏப்.11-ம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஜாக்டோ- ஜியோ அமைப்பினர்களுடன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்பு ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கூறுகையில், "இந்தப் பேச்சுவார்த்தையில் ஒவ்வொரு கோரிக்கை தொடர்பாகவும் அமைச்சர்கள் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர். கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். இதன்படி இந்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. முதல்வர் மீதான நம்பிக்கையில் எங்களது போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்று அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE